'கஞ்சா அடிக்கிறீங்களா பாஸ்' - சுற்றுலா பயணிகளை மிரளவைக்கும் கும்பல் | Coimbatore kanja smugglers threatens Tourist

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (21/11/2017)

கடைசி தொடர்பு:19:20 (21/11/2017)

'கஞ்சா அடிக்கிறீங்களா பாஸ்' - சுற்றுலா பயணிகளை மிரளவைக்கும் கும்பல்

“அவர்களுக்கு வயது இருபதைக்கூட தாண்டியிருக்காது. அழுக்கு சட்டையும் லுங்கியும் அணிந்தபடி ஆளே ஒருமாதிரி டெர்ராக இருந்தார்கள். ஓர் ஓரமாக அமர்ந்துகொண்டு அந்தப் பகுதிக்கு டூரிஸ்டாக வரும் இளைஞர்கள் அத்தனைபேரையும் நோட்டம் விடுகிறார்கள். என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிலரிடம் மட்டும் நெருங்கிப்போய் காதோரமாய் கஞ்சா அடிக்கிறீங்களா பாஸ் என்று கேட்கிறார்கள். டூரிஸ்ட் இளைஞர்கள் ஓ.கே என்று தலையசைத்தால் லுங்கியிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் கைமாறுகின்றன” மேட்டுப்பாளையம் டு கோத்தகிரி சாலையில் உள்ள பவானிசாகர் வியூ பாயிண்ட்டில்தான் இந்த பகீர் காட்சி.

கோவை நகரப் பகுதிகளுக்குள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து இயங்கிக்கொண்டிருந்த கஞ்சா கும்பல் இப்போது டூரிஸ்ட் செல்லும் இளைஞர்களுக்கு வலைவீச ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக அந்தச் சாலையில் ரெகுலராகப் பயணிப்பவர்கள் சிலரிடம் விசாரித்தோம், “இந்த ரூட்டில் எங்கெங்கெல்லாம் வியூ பாயின்ட் இருக்கிறதோ. அங்கெல்லாம் இந்தக் கஞ்சா கும்பல் உலவுகின்றது. ஒவ்வொரு ஸ்பாட்டிலும் இரண்டு அல்லது மூன்றுபேர் நின்றுகொள்கிறார்கள்.

குடும்பத்தோடு ஆட்கள் வந்தாலோ கூட்டமாக இருந்தாலோ கஞ்சா கும்பல் பதுங்கிக்கொள்ளும். தனியாக வரும் இளைஞர்கள்தான் இவர்களின் டார்கெட். அதுவும் எல்லாரையும் இவர்கள் அப்ரோச் செய்வதில்லை. முதலில் அந்த இளைஞர்களின் முகங்களைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்கள் சிகரெட்  பிடித்தாலோ சரக்கில் இருந்தாலோ அவர்களை உடனடியாக மடக்கிவிடுகிறார்கள். ஒரு பொட்டலம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் ஆளைப்பொறுத்து விலை சொல்கிறார்கள். விற்பனை சக்கைப்போடு போடுகிறது. அதுவும் சனி ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த வழியாக ஊட்டிக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும். ஜகஜோராகக் கல்லாகட்டுவார்கள். இதெல்லாம் போலீஸுக்கும் தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். காரணம், போலீஸுக்கு ரெகுலராகக் கஞ்சா வியாபாரிகள்  கப்பம் கட்டிவிடுகிறார்கள் என்கிறார்கள். சின்ன வயசுலயே பசங்க கெட்டு சீரழியுறாங்க. எப்படி இருக்குன்னு பாப்போம்னு ஏதோ ஓர் ஆர்வத்துல ஒரு முறை வாங்கி இழுத்துட்டாங்கன்னா... அப்புறம் அவ்வளவுதான் அப்படியே அதுக்கு அடிமையாகிடுவாங்க. அவுங்க வாழ்க்கையே நாசமாகிடும். இதெல்லாம் தெரிஞ்சும் போலீஸ் கண்டுக்க மாட்டேங்குது என்கிறார்கள் கவலையுடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க