'விசாரணை கமிஷனிடம் கொடுக்கப்பட்ட  இரண்டு சி.டி.க்கள்!' - ஜெயலலிதா மரண மர்மம் விலகுமா?   | Jayalalithaa death mystery - two CD's handed over to panel

வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (21/11/2017)

கடைசி தொடர்பு:19:19 (21/11/2017)

'விசாரணை கமிஷனிடம் கொடுக்கப்பட்ட  இரண்டு சி.டி.க்கள்!' - ஜெயலலிதா மரண மர்மம் விலகுமா?  

  ஜெயலலிதா

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக இரண்டு சி.டி.க்கள், விசாரணை கமிஷனிடம் அ.தி.மு.க ஜெயலலிதா அணி சார்பில் பசும்பொன்பாண்டியன் கொடுத்துள்ளார். 

 ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் அறிவித்தபடி ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அஃபிடவிட்களைத் தாக்கல் செய்துவருகின்றனர். தீபாவின் கணவர் மாதவன், 19 சந்தேகங்கள் இருப்பதாக நேற்று அஃபிடவிட்டை கமிஷனிடம் கொடுத்தார். அடுத்து, தீபா அணியிலிருந்து பிரிந்து அ.தி.மு.க ஜெயலலிதா அணியை ஏற்படுத்திய பசும்பொன்பாண்டியன், அந்த அணியின் சென்னை மாவட்டச் செயலாளர் பூங்கா.பி.கே.மாரி ஆகியோர் விசாரணை கமிஷனிடம்  அஃபிடவிட்டை தாக்கல் செய்துள்ளனர். அப்போது, அவர் இரண்டு சி.டி.க்களையும் கொடுத்தனர்.

இதுதொடர்பாகப் பசும்பொன்பாண்டியனிடம் பேசினோம், "ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அதன்பிறகு, அந்த நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறினார். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைய முயன்ற தீபாவை போலீஸார் தடுத்துநிறுத்தினர். அப்போது, தீபா அளித்த பேட்டியில் என் அத்தை ஜெயலலிதாவை சசிகலா கொன்றுவிட்டதாகக் கூறினார். சசிகலாவுடன் சேர்ந்து என்னுடைய சகோதரர் தீபக், பணத்தை வாங்கி கொண்டு அத்தையைக் கொன்றுவிட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பின்னர், ஜெயலலிதா மரணத்தில் முக்கிய ஆதாரம் தொலைபேசி வாயிலாகத் தனக்கு கிடைத்துள்ளதாகவும் தீபா குறிப்பிட்டார். ஜெயலலிதா மரணத்தில் தீபாவின் நிலைப்பாடு குறித்து விசாரணை கமிஷன் அவரிடம் விசாரிக்க வேண்டும். தமிழக அரசு விசாரணை கமிஷன் அறிவித்தவுடன் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தீபா வலியுறுத்தினார். இவ்வாறு தீபா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி விவரங்களை இரண்டு சி.டி.க்களை விசாரணை கமிஷனிடம் சமர்பித்துள்ளேன்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவர் வகித்த துறைகள், ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை விவரம் அப்போலோ மருத்துவமனையிலிருந்து தினமும் கிடைத்திருக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரம் அளித்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தப் பிறகு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, விசாரணை கமிஷன் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

ஜெயலலிதா தொடர்பான சிகிச்சை விவர அப்போலோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு அடிப்படையில் பிரதாப் ரெட்டியிடம் விசாரிக்க வேண்டும். அப்போதைய தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக உளவுத்துறை ஐ.ஜி, போலீஸ் டி.ஜி.பி ஆகியோர் ஜெயலலிதா மரணம் குறித்து எந்த செய்திக் குறிப்பும் வெளியிடவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு போயஸ்கார்டன் வீட்டிலிருந்தவர்களின் விவரம் கிடைத்திட அங்கிருந்த சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆராய வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, தகவல் தெரிவிக்கப்பட்டதா ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரிக்க வேண்டும். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து தெரிவித்த தகவல் அடிப்படையில் அவர்களிடம் விசாரிக்க வேண்டும். இது தவிர ஜெயலலிதா மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும் இட்லி சாப்பிட்டதாகவும் தெரிவித்த பண்ருட்டி ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மூத்த தலைவர் பொன்னையன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

ஜெயலலிதா சிகிச்சை விவரம் குறித்த வீடியோ ஆதாரம் இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார். எனவே, அந்த வீடியோ குறித்து கமிஷன் விசாரிக்க வேண்டும். அகத்தியர் கோவில் ஐயர் தேவாதி, கடந்த 24.12.2016-ல் மருத்துவமனைக்கு யாரால் அழைக்கப்பட்டார் என்றும், மருத்துவமனையில் அவர் யாரைச் சந்தித்தார் என்றும் விசாரிக்க வேண்டும். சிகிச்சையின்போது ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, இளவரசியிடம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விசாரணை கமிஷன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் எந்தவித தலையீடு இல்லாமலும் விசாரணை கமிஷன் செயல்பட வேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்