டாஸ்மாக் கடையை அகற்ற 15 நாள் கெடு... அதிகாரிகளை எச்சரிக்கும் மக்கள்..! | 15 day deadline to remove the TASMAC wine shop, people warn officials

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (21/11/2017)

கடைசி தொடர்பு:21:15 (21/11/2017)

டாஸ்மாக் கடையை அகற்ற 15 நாள் கெடு... அதிகாரிகளை எச்சரிக்கும் மக்கள்..!

கோயில்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  தி.மு.க.வும் கலந்து கொண்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

                                   
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள அடைக்கலபுரத்தில் அரசு மதுபானக்கடை 2 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் கிறிஸ்தவ ஆலயமும், விநாயகர் கோயிலும் உள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்கிக்கொண்டு வந்து கோயில் முன்பே குடித்துவிட்டு பாட்டிலை வீசிச் செல்கிறார்கள் என்றும் கோயிலுக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் கிராம மக்கள். 

                               

ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செம்பியக்குடி, குலமாணிக்கம், அடைக்கலபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவசங்கர் கண்டன உரையாற்றினார். "அடைக்கலபுரத்தில் அமைந்துள்ள மதுபானக்கடையால் பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள்.

                         

டாஸ்மாக் கடையை ஆலயத்திற்கு அருகே கொண்டுவந்தது முதல் தவறு. மக்களுக்காகத்தானே இந்த அரசாங்கம். மக்களே இந்த டாஸ்மாக் கடை வேண்டாம் என்று சொல்லும்போது எதற்காக இந்தக் கடையை அகற்றாமல் வைத்திருக்கிறார்கள். அப்போ பொம்பளைங்க தாலிய அறுத்து அதிலிருந்து வரும் காசு அரசுக்கு முக்கியமா சொல்லுங்க. இந்த டாஸ்மாக் கடையால் பெண்கள் தினம் தினம் வீட்டில் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். பெண்களின் வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளிடம் அதிகாரிகள் துணை போகாதீர்கள். இன்னும் 15 நாள்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் இல்லையென்றால் பொதுமக்களோடு நாங்கள் அகற்றுவோம்” என்று எச்சரித்தார்.