மீனவர்கள் கண்டெடுத்த துப்பாக்கிக் குண்டு கடலோரக் காவல்படையினர் பயன்படுத்துவதுதான் - கமாண்டர் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர்கள்மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட  துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக மீனவர்கள் புகார் கூறியிருந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தின்போது மீனவர்களது படகில் சிதறிக் கிடந்த துப்பாக்கிக் குண்டு ஒன்றையும் கண்டெடுத்துவந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏதும் நடத்தவில்லை என சென்னை கடலோரக் காவல்படை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதேபோல் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்தியக் கடற்படையில் பயன்படுத்துவது இல்லை என மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

 

மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ்
 

இந்நிலையில்,  உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தங்கச்சிமடத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மீனவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம்குறித்து எனக்கு ஏதும் தெரியாது. ஏனெனில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தது சென்னைக் கடலோரக் காவல் படை நிலையத்திலிருந்து வந்த கப்பலாகும். ஆனால், மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட 0.22 மி.மி அளவு கொண்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான். மீனவர்கள்மீது ரப்பர் குண்டு தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியானதால் அதை அமைச்சர் அவர்கள் மறுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். மேலும், மீனவர்கள் மீதான தாக்குதல்குறித்து விசாரணை நடத்த சென்னையில் தனிக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!