வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (21/11/2017)

கடைசி தொடர்பு:08:02 (22/11/2017)

'உங்கள் கணவரிடம் விசாரணை நடந்துட்டு இருக்கு; எங்கு இருக்கிறார் எனத் தெரியாது' - பெண்ணை அதிரவைத்த போலீஸ் பதில்

ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உமா மகேஸ்வரி என்ற பெண், ''தன் கணவரைப் பெருந்துறை காவல்துறையினர் அடித்து காரில் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை'' என்று கண்ணீரோடு புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, ''நாங்க ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செங்கோடன்பள்ளம் கோல்டன் சிட்டி அருகே மளிகைக் கடை வைத்திருக்கிறோம். என் கணவர் பெயர் ரவிச்சந்திரன். எங்களுக்கு பரத் என்ற 18 வயது மகன் இருக்கிறான். எங்க மளிகைக் கடைக்கு அடிக்கடி திருமூர்த்தி என்பவர் வருவார். அவர் பெருந்துறையில் உள்ள ஶ்ரீதேவி ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் வேலைப்பார்த்துவந்தார்.

திருமூர்த்தி அந்த நிறுவனத்தில் ஏதோ பணம் கையாடல் செய்துவிட்டு வேலைக்குப் போகாமல் இருந்தார். இரண்டு மாதத்துக்கு முன்பு ஶ்ரீதேவி ஸ்டீல்ஸ் கம்பெனியிலிருந்து எங்க கடைக்கு வந்து திருமூர்த்தியைப் பற்றி விசாரித்தார்கள். எங்களுக்கு திருமூர்த்தியைப் பற்றி தெரியாது. கடைக்கு அடிக்கடி வருவார். எங்க ஆம்னி காரை எடுத்துட்டுப் போவார். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டோம். அதையடுத்து, பெருந்துறை எஸ்.ஐ., ஒரு நாள் எங்க கடைக்கு வந்து மீண்டும் திருமூர்த்தியைப் பற்றி விசாரித்தார். அவரைப் பற்றி தெரியாது என்று சொல்லிவிட்டோம்.  

இந்நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு என் கணவர் கடையில் இருக்கும்போது டி.என் 56 ஜே 7007 நம்பர் உடைய இனோவா காரில் 4 பேர் வந்திருக்கிறார்கள். கடைக்குள் புகுந்து என் கணவரை அடித்து இழுத்துட்டுப் போய் காரில் உக்கார வைத்துவிட்டு எங்கள் வீட்டுக்குக் கீழே நின்றுகொண்டிருந்த எங்க ஆம்னி வேனை யூனிஃபார்மில் இருந்த போலீஸ் எடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்து அக்கம் பக்கத்தில் விசாரித்துவிட்டு கடையில் இருந்த கேமராவில் பார்த்தபோது 4 பேர் எங்க வீட்டுக்காரரை அடித்து இழுத்துக்கொண்டு போகிற காட்சி இருந்தது. அதையடுத்து, பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றோம். அங்கு எங்க ஆம்னி வேனும் இருந்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தபோது நாங்க கூட்டிட்டு வரவில்லை என்று சொன்னார். எங்க கார் இங்க இருக்கிறதே என்று கேட்டதற்கு உன் கணவரிடம் விசாரணை நடந்துட்டு இருக்குன்னு சொல்கிறார். எங்கு இருக்கிறார் என்று கேட்டதற்கு தெரியாது என்று கூறுகிறார்.

எங்க வீட்டுக்காரர் எந்தக் குற்றமும் செய்யக்கூடியவர் அல்ல. திருமூர்த்தி எங்க ஆம்னியை அடிக்கடி எடுத்துட்டுப் போவார். அதனால் ஏதாவது பிரச்னை இருக்கலாம். எதுவானாலும் காவல்துறை யாரிடமும் சொல்லாமல் அடித்து இழுத்துட்டு எப்படிப் போகலாம்'' என்று கண்ணீர் விட்டார்.