வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (21/11/2017)

கடைசி தொடர்பு:09:18 (22/11/2017)

கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் மேனேஜர் தற்கொலை... வாக்குமூலக் கடிதம் சிக்கியதால் பரபரப்பு!

இயக்குநர், நடிகர் சசிகுமாரின் சொந்த நிறுவனமான `கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்'-ன் மேனேஜரும் அவரது உறவினருமான பா.அஷோக் குமார் இன்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதியுள்ள கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடிதம்

`சுப்ரமணியபுரம்' படத்தை இயக்கி, நடித்த சசிகுமார், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். தொடர்ந்து பசங்க, ஈசன், போராளி, சுந்தரபாண்டியன், தலைமுறைகள், தாரை தப்பட்டை, கிடாரி, பலே வெள்ளையத்தேவா, கொடி வீரன் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். தமிழகத்தில் ஆக்கபூர்வமான பல திரைப்பட முயற்சிகளை எடுத்ததால், இந்நிறுவனத்துக்குத் திரைத்துறையினர் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இந்த நிறுவனத்தை முழுவதுமாகக் கவனித்து வந்தது சசிகுமாரின் அத்தை மகன் பா.அஷோக் குமார். சில ஆண்டுகளுக்கு முன்னர், படத்தின் நிதித் தேவைக்காக அஷோக் குமார், மதுரையைச் சேர்ந்த பிரபல பைனான்ஸியர் அன்புச் செழியனிடம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கடனுக்கு கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சில ஆண்டுகளாக வட்டி கட்டி வந்துள்ளார் அஷோக் குமார். இந்த வட்டி கட்டும் பிரச்னையால், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் பெரும் நிதிச் சுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அன்புச் செழியன் கடன் கேட்டு அஷோக் குமாருக்குக் குடைச்சல் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக மீளாத் துயரை அனுபவித்துவந்துள்ளார் அஷோக் குமார். இந்த நிலையில், வேதனை தாங்க முடியாத அவர், இன்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் அஷோக் குமார் எழுதிய கடிதம் ஒன்று தற்போது சிக்கியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீஸார் அஷோக் குமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பைனான்ஸியர் அன்புச் செழியன் தொடர்புடைய இந்தத் தற்கொலை சம்பவம், சினிமா வட்டத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் எனத் தெரிகிறது.