சாலைகளுக்கு நடுவே கான்க்ரீட் பூங்கா...சென்னை மாநகராட்சியின் செயல் சரியா?

உலக வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பலவும், பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. வளர்ந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகள் வரை சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மரம் நடுவது, புகையைக் கட்டுப்படுத்துவது என இயற்கை சார்ந்த விஷயங்களில் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. சாலைகளில் பூங்கா அமைத்துப்  பராமரிப்பது என்பது நகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஓரளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் சென்னை மாநகராட்சி வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கைக்கு மாறான ஒரு திசையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

பூங்கா ஸ்பார் டேங்க் சாலை

சென்னை போன்ற பெரு நகரங்களில் வளர்ச்சி என்கிற பெயரில் மேற்கொள்கின்ற வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இன்றுவரை நெருக்கடியைக் குறைக்கவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம்.

சாலைகளின் ஓரத்திலும் இணைப்புச் சாலைகளின் மையப் பகுதிகளிலும் செடிகள் மற்றும் மரம் நட்டு வளர்ப்பதுதான் இப்போது வரை வழக்கமாக இருக்கிறது. ஆனால், சென்னை எழும்பூர் அருகில் உள்ள காசா மேஜர் சாலை, ஸ்பர் டேங்க்  சாலை, கிழக்கு ஸ்பர் டேங்க் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கிற குறுகிய இடத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு புல்வெளிகளால் ஆன ரவுண்டானா இருந்தது. ஆனால், இன்று பெரு நகர வளர்ச்சி என்கிற பெயரில் அந்த இடத்தில் கான்க்ரீட் ரவுண்டானா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறுகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கான்க்ரீட் கட்டுமானங்கள் வாகன நெரிசலை அதிகமாக்குகிறது. மேலும் சாலையின் மூன்று பகுதிகளிலும் முக்கோண வடிவில் சிங்கத்தின் சிலைவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மிகக் குறுகிய சந்திப்பாக இருந்த இடத்தில் இப்போது ஆக்கிரமித்திருப்பதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. 

காசா மேஜர் சாலை

சாலைச் சந்திப்பின் பக்கத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் பேசியதில் “அஞ்சு மாசத்துக்கு முன்னாடி வர இங்க இருந்த ரவுண்டானா புல்வெளியா இருந்தது, வர்தா புயல் வந்த நேரம் இங்க இருந்த மரம் எல்லாம் ஒடஞ்சி விழுந்துருச்சு, அதுக்கு அப்புறம் வளர்ச்சியென்று சொல்லி புல்வெளி இருந்த இடத்தில் கான்க்ரீட் ரவுண்டானா அமைச்சாங்க. நிமிடத்துக்கு 1௦௦ வண்டி போகிற சாலையில் கான்கிரீட் ரவுண்டான அமைச்சதால பெரிய அளவுல பாதிப்பு இருக்கு. அது மட்டும் இல்லாமல் சாலையின் மூன்று பக்கமும் சாலையை ஆக்கிரமித்து சிங்கம் சிலை வச்சுருக்காங்க, இது இந்த இடத்துக்கு அவசியமானது இல்லை" என்றார். 

சாலைகளின் ஓரத்திலும் சாலைகளின் நடுவிலும் மரங்கள் புல்வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு முக்கிய காரணம் புகை மட்டும்தான். புல்வெளிகளும், செடிகளும்தான் ஓரளவிற்காவது காற்றைச் சுத்தகரிக்கின்றன. சாலையின் நடுவில் செடிகள் கொண்டு பூங்கா அமைப்பதற்கு முக்கிய காரணம் எதிர்த் திசையில் வருகிற வாகனங்களின் முகப்பு வெளிச்சம் வாகன ஓட்டிகளைப் பாதிக்காமல் தடுப்பதற்கும்தான். ஆனால், சென்னை மாநகராட்சி அப்படியான இயற்கை திட்டத்தை கைவிட்டு விட்டு கான்க்ரீட் கொண்டு சாலைகளை அழகு படுத்துவது ஆபத்தான ஒரு விஷயம் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். 

சாலை மீடியன்

பெரு நகரங்களின் வளர்ச்சி அதன் கட்டமைப்பை கொண்டே  தீர்மானிக்கப்படுகிறது. சென்னையின் உள்கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஒரு பருவ மழை வெளிக்காட்டி விடுகிறது. சென்னையில் கட்டுமானங்களும் வாகனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றோடு ஒப்பிடும் பொழுது சென்னையின் உள்கட்டமைப்பு இன்னும் வளர்ச்சி பெறவில்லை. அவற்றை முன்னெடுக்காமல் சாலைகளில் கான்க்ரீட் ரவுண்டானா அமைப்பதிலும் சிலைகள் கொண்டு அழகு படுத்துவதும் மேற்கொண்டு சிக்கல்களை உருவாக்குமே தவிர தீர்வுகளைக் கொண்டு வராது என்பதை எப்போது உணர்கிறார்களோ அப்போதுதான் எல்லா வழிகளிலும் சென்னைக்கு வெளிச்சம் கிடைக்கும்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!