வெளியிடப்பட்ட நேரம்: 22:56 (21/11/2017)

கடைசி தொடர்பு:08:15 (22/11/2017)

பள்ளி மாணவிகளுக்கு டெங்கு கொசு ஒழிப்பு பயிற்சி அளித்த மாவட்ட ஆட்சியர்..!

டெங்கு ஒழிப்பு

டெங்கு ஒழிப்புப் பணியில் புதிய முயற்சியாக பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து டெங்கு கொசுக்களை ஒழிக்க நெல்லை ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் காலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்திவருகிறார். இன்று மேலப்பாளையம் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘’நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மெகா தூய்மைப் பணிகள் மற்றும் டெங்கு விழிப்பு உணர்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த இரு மாதமாக நடந்த பணியின் மூலமாக 6 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களே டெங்குக் காய்ச்சல் காரணமாக அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். அதனால் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். 

மாணவர்களுக்கு பயிற்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் பற்றியும் அவற்றைக் கண்டுபிடிப்பது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏடிஸ் கொசுக்களின் முட்டைகள், புழுக்களைக் கண்டுபிடித்து அவற்றை அழிப்பது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் மூலமாக அவர்கள் தங்களுடைய வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் உள்ள கொசுக்களை அழிக்க பாடுபடுவார்கள். 

மாநகராட்சிப் பகுதிகளில் 50 பணியாளர்கள் பள்ளி, கல்லூரி கட்டடங்களில் டெங்குக் கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு முதல்முறையாக எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து மெத்தனமாக இருந்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீல் வைக்கப்பட்ட சில நிறுவனங்கள், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதை ஆய்வுசெய்த பின்னர் திறக்க அனுமதி அளிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.