வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (22/11/2017)

கடைசி தொடர்பு:08:36 (22/11/2017)

பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்த இளைஞர்கள் - அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி என்ற இடத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவிகளை வீடியோ எடுத்து இளைஞர்கள் சிலர் மிரட்டியதால், 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், சுமார் 600 மாணவ, மாணவியர் வரை படிக்கிறார்கள். இப்பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கழிவறையையும் பயன்படுத்தி வந்துள்ளனர். பழைய கழிவறைக் கட்டடத்தின் சுற்றுச்சுவர் சற்று உயரம் குறைவாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், பழைய கழிவறைக்குச் சென்ற சில மாணவிகளை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சுவருக்கு வெளியே நின்று வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அதைவைத்துக்கொண்டு  அந்த மாணவிகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

 தொடர்ந்து சில நாள்கள் மிரட்டிவந்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அந்த மாணவிகள், ஒருகட்டத்தில் அதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.  அதனால் கடும் ஆத்திரமடைந்த பெற்றோர், 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோருடன் இன்று பூலுவப்பட்டி உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தத் துவங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்தச் சம்பவம்குறித்து தகவலறிந்த திருப்பூர் முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தி, மாநகர காவல் உதவி கமிஷனர் உட்பட சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களின் பெற்றோரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, " பெண்கள் கழிவறையில் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிக்கு உடனடியாக காவலாளியை நியமிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கைவைத்தனர். பின்னர் பூலுவப்பட்டி உயர்நிலைப் பள்ளி தொடர்பாக, பெற்றோர்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனுவும் முதன்மைக் கல்வி அதிகாரியிடம்  அளிக்கப்பட்டது. அதில், " கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி மாணவர்களை வற்புறுத்துவதைப் பள்ளி நிர்வாகம் கைவிட வேண்டும். பள்ளியில் நிரந்தரமாக ஒரு துப்புரவுத் தொழிலாளியை நியமிக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள்  இருந்தன.

மனுவைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அதிகாரி, உடனடியாக பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கழிவறைக் கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கு ஏற்பாடுசெய்கிறோம் என்று உறுதியளித்தார். மேலும், கழிப்பறையில் வீடியோ எடுத்து மாணவிகளை அச்சுறுத்திய இளைஞர்களைத் தேடிப்பிடித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் காவல்துறையினர் உறுதியளித்தனர். அதன்பிறகே, பள்ளி வளாகத்தில் திரண்டிருந்த பெற்றோர்கள், தங்களின் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனர்.