தூத்துக்குடியில் விவசாயிகள் சாலை மறியல்!

தாமிரபரணியிலிருந்து வடகால் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்திப் பலமுறை மனு அளித்தும் தண்ணீர் திறக்காததால், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

farmers doing road block strike

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையினால், வடகால் மற்றும் தென்கால் மூலம் 53 குளங்களிலிருந்து 46,107 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது. இதன்மூலம், இரு போகங்களாக கார் மற்றும் பிசான சாகுபடி மூலம் நெல் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு இணையாக வாழையும் இப்பகுதியில்  பயிரிடப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்  பிசான சாகுபடிக்காக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மருதூர் அணையின் மேலக்கால், கீழக்கால் பகுதிகள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் வாய்க்காலில் தண்ணீர் தேவையான அளவுக்குச் செல்லாததால், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் பாசனம் மற்றும் மடை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் அழகுராஜா, ‘’ ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைமூலம் வடகால், தென்கால் பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. இதில், முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், குலையன்கரிசல், பொட்டல்காடு, சிறுபாடு என 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி முழுவதுமே வடகால் பாசனத்தின்மூலம் தண்ணீரைப் பெற்று விவசாயம் செய்யும் பகுதி. 

road traffic for farmers protest in thoothukudi

இந்தப் பிசான சாகுபடியில் நெல்லைவிட பேயன், சக்கை, கதலி ஆகிய வாழையைத்தான் அதிக அளவில் சாகுபடிசெய்திருக்கோம். இந்தப் பருவ சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வடகால் பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் இந்த நீர்தான் ஆதாரம். இது குறித்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் இதுவரை 20 மனுக்கள் வரை கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத்தால்,  வடகால் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து சாலைமறியலில் ஈடுபட்டோம். விரைவில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம்’’ என்றார்.

நெல்லையிலிருந்து தூத்துக்குடி வந்த  தாமிரபரணி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், ஒரு வாரத்துக்குள் தண்ணீர் திறந்துவிடப்படும் என எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்ததையடுத்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இப்போராட்டம் 2 மணி நேரம் வரை நீடித்ததால்,  போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!