தொண்டர்களின் உணர்வைத்தான் எதிரொலித்தேன்! தடதடக்கும் மைத்ரேயன்

'அணிகள் இணைந்தாலும் அ.தி.மு.க.வில் சலசலப்பு குறையவில்லை' என்ற பேச்சு, சமீபகாலமாக நிலவி வருகிறது. 


அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த ஓ.பி.எஸ். அணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது. அணிகள் இணைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மனக்கசப்பு இருந்ததாகவும் அ.தி.மு.க வட்டாரங்களில் பேசப்பட்டுவந்தது. இதுகுறித்துப் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ’அ.தி.மு.க-வில் நடப்பது அண்ணன், தம்பிகளுக்கிடையேயான பிரச்னைதான். அது, விரைவில் பேசித் தீர்க்கப்படும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அ.தி.மு.க-வில் நடக்கும் சலசலப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில், ’ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து, இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று பதிவிட்டிருந்தார். இதனால், அ.தி.மு.க-வில் சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்துவதுபோல இந்தப் பதிவு இருந்தது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘மைத்ரேயனின்  ஃபேஸ்புக் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து. இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்பது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. இரட்டை இலை சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைச் சந்திப்போம்’ என்று கூறியிருந்தார்.   


அவர் பேசிய அடுத்த சில நிமிடங்களில், மைத்ரேயனிடமிருந்து தம்பிதுரைக்கான பதில் ஃபேஸ்புக் வாயிலாகவே கிடைத்தது. இதுதொடர்பாக ’நேற்று நான் எனது முகநூல் பக்கத்தில் செய்த பதிவுகுறித்து தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்’ என்று மைத்ரேயன் பதிலளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!