வேலூரில் விரைவில் விமான சேவை! கலெக்டர் ராமன் ஆய்வு | Vellore: Collector Raman inspects Airport expanding works

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (22/11/2017)

கடைசி தொடர்பு:17:05 (04/02/2019)

வேலூரில் விரைவில் விமான சேவை! கலெக்டர் ராமன் ஆய்வு

வேலூரில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வுசெய்தார். 

நாடு முழுவதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் விமான சேவை இதுவரை வழங்கப்படாத சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. 

அதன்படி, வேலூரில் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள விமான நிலையத்தைச் சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையப் பணிகளை தென்மண்டல விமான போக்குவரத்து ஆணையர் கடந்த 17-ம் தேதி ஆய்வுசெய்தார். அந்த ஆய்வின்போது விமானநிலைய இயக்குநர் மாயப்பன் சுவாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், செய்தியாளரிடம் பேசிய அவர், ''2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வேலூரில் விமானப் போக்குவரத்து தொடங்கும்'' என்றார். 

இந்தநிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வுசெய்தார். அப்போது, விமான நிலையத்துக்குச் செல்லும் பொய்கை - மோட்டூர் மற்றும் சத்தியமங்கலம் - மோட்டூர் ஆகிய சாலைகளை ஆட்சியர் ராமன் ஆய்வுசெய்தார். தலா 2 கி.மீ. நீளம்கொண்ட சாலைகளைப் பார்வையிட்ட அவர், அந்தச் சாலைகளை 6 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் ஆட்சியர் ராமன் தெரிவித்தார். இந்தஆய்வின்போது டி.ஆர்.ஓ. செங்கோட்டையன், நெடுஞ்சாலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை, ஆர்.டி.ஓ.செல்வராஜ், தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.