'அரசு செட்அப் பாக்ஸ்களுக்குப் பதிலாகத் தனியார் செட்அப் பாக்ஸ்'- வாடிக்கையாளர்களை அதிரவைக்கும் ஆபரேட்டர்கள்

தனியார் கேபிள் நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணக்கொள்ளையைத் தடுக்கும் வகையில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது, அரசு கேபிள். மாவட்டத் தலைநகரங்களில் எம்.எஸ்.ஓ-க்களை அமைத்து,  மாதக் கட்டணம் 70 ரூபாய் வசூலிக்க ஏரியா வாரியாக கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டு, கடந்த சில வருடங்களாக செயல்படுத்திவந்தனர்.

இந்த நிலையில், கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டலாக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டதால், சில ஆண்டுகள் விலக்குக் கோரியிருந்த தமிழக அரசை, கட்டாயமாக டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய வேண்டுமென்றும், செட் அப் பாக்ஸ்கள் வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

அரசு செட் அப் பாக்ஸ்

மக்களிடம் 200 ரூபாய் பெற்றுக்கொண்டு, செட் அப் பாக்ஸ்களை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பல கேபிள் ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனமொன்றின் செட் அப் பாக்ஸ்களை வாங்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்திவருகின்றனர். இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய மதுரை வாசகர் ஒருவர், "எங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர், தனியார் நிறுவனங்களின் செட் அப் பாக்ஸ்களை வாங்க வலியுறுத்துகிறார். அரசு செட் ஆப் பாக்ஸ்கள் வேண்டும் என்று கேட்டால், அதெல்லாம் கிடைக்காது, தனியார் நிறுவனங்களின் செட் அப் பாக்ஸ்களை வாங்க வேண்டுமென்றும், அதற்கு 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், மாதச் சந்தா 250 ரூபாய் என்றும் வற்புறுத்திவருகிறார்கள். வீடுகள் தோறும் விண்ணப்பங்களை அளித்துவருகிறார்கள். இதற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றால், கேபிளே வீட்டுக்கு வராது என்று மிரட்டுகிறார்கள்" என்றார்.

இந்தப் பிரச்னை, அனைத்து  மாவட்டங்களிலும் அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. ஆனால், அரசு கேபிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!