காவுவாங்க காத்திருக்கும் நூலகக் கட்டடம்! மரண பீதியில் நூலகவாசிகள்

சென்னை ஏர்போர்ட் கண்ணாடிகளில் ஆரம்பித்து, பேருந்து நிலைய மேற்கூரைகள், பள்ளிக்கூட மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் உயிர்ப் பலி, காயங்கள் ஏற்பட்டதைப் பார்த்து நாம் பதறிவிட்டோம். இப்போது அந்தப் பதற்றத்தை வேந்தன்பட்டி கிராம மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது வேந்தன்பட்டி கிராமம். இங்கு அமைந்துள்ள கிளை நூலகக் கட்டடம் முதல்வரின் கனவு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டது. (நூலகக் கட்டட முகப்பில் அப்படித்தான் எழுதி இருக்கிறது) ஒட்டுமொத்த கட்டடமே இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. அதிலும் நூலக முகப்பு எந்த விநாடியிலும் விழக்கூடிய அபாயக்கட்டத்தில் இருக்கிறது.

நூலகத்தில் படிக்க வருபவர்கள், "தினசரி பேப்பர் படிக்கவே நாங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் உள்ளே போக வேண்டியதாயிருக்கு. பேப்பர் செய்தி படிக்க வந்து, நாங்கள் பேப்பர் செய்தி ஆகிடுவோம் போலிருக்கு" என்றார்கள்.

"கட்டடத்தின் அபாய நிலையைக் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை புகார் அளித்துவிட்டோம். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டடம் இடிந்து விழுந்து யாராவது இறந்தால்தான் அதிகாரிகள் ஓடிவந்து நடவடிக்கை எடுப்பார்கள்போல. அப்படி ஓர் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, நூலகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும்" என்கின்றனர் வேந்தன்பட்டி கிராம மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!