வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/11/2017)

கடைசி தொடர்பு:19:40 (22/11/2017)

'ஜல்லியைக் காணோம்' - புதிய சாலையின் 3 மாத அவலம்

மூன்றே மாதத்தில் பல்லிளித்த சாலை

கொடைக்கானல் அருகே பூம்பாறை - குண்டுப்பட்டி கிராமங்களுக்கு இடையே சாலை மிக மோசமடைந்திருந்தது. இதை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஒருவழியாக மூன்று மாதங்களுக்கு முன்பு சுமார் 6 கோடியே 30 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. புதிய சாலைப் பணிகள் முடிந்து 3 மாதங்கள்கூட ஆகாத நிலையில், வாகனங்கள் செல்ல முடியாத அளவு சேதமடைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறையிலிருந்து குண்டுப்பட்டி கிராமத்துக்குச் செல்லும் 8.12 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவு குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் குண்டுப்பட்டி மக்கள் பூம்பாறைக்குச் செல்ல சுமார் 40 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு வர வேண்டியிருந்தது. இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில் புதியதாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். அரசின் முரட்டு செவிகளில் இந்த மலைவாழ் மக்களின் குரல் எதிரொலித்ததைத் தொடர்ந்து, புதிய சாலை அமைப்பதற்காக 5 வருட பராமரிப்பு திட்டத்தின் கீழ் 6,31,45,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பூம்பாறையிலிருந்து குண்டுப்பட்டி வரையுள்ள 8.12 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணி, ஒரு தனியார்  நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு டிசம்பர் 2016-ல் வேலை தொடங்கி, ஆகஸ்ட் 2017-ல் பணி நிறைவடைந்தது.

ஆனால், மோசமான பணியின் காரணமாக மூன்றே மாதத்தில் புதிய சாலை சேதமடைந்துள்ளது. இந்நிலையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இன்று இந்தச் சாலையை நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், "சாலைப் பணிகள் முடிந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்துவிட்டன.  பெரும்பாலான இடங்களில் சாலையின் கீழே உள்ள மண் வெளியே தெரிகிறது. சரவணா என்ற கட்டுமான நிறுவனம் தரமற்ற சாலையைப் போட்டுள்ளது. இந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பலர், விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தச் சாலையைப் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பாதை போட்டும் பயனில்லையே எனத் தங்கள் விதியை நொந்தபடியே பயணத்தைத் தொடர்கிறார்கள் மேல்மலை மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க