'குடும்பத்தையே தூக்கிடுவேன்னு மிரட்டினார் அன்புச்செழியன்!’ - போலீஸிடம் நடிகர் சசிகுமார் புகார் #VikatanExclusive

நடிகர் சசிகுமார்

வட்டிக்கு வட்டி கேட்டு மிரட்டியதோடு பணத்தை குறிப்பட்ட தினத்துக்குள் கொடுக்கவில்லை என்றால் 'குடும்பத்தில் உள்ள பெண்களைத் தூக்கிவிடுவேன்' என்று ஃபைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதாக போலீஸிடம் நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 

 சென்னை, வளசரவாக்கம், பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் நடிகர் சசிகுமார். இவரது உறவினர் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வளசரவாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில் கந்துவட்டிக் கொடுமையால் அசோக்குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.  

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், வளசரவாக்கம் போலீஸில் அன்புச் செழியன் மீது பரபரப்பான புகாரைக் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய அத்தை மகன் அசோக்குமார், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில் குடியிருந்துவருகிறார். என்னுடன் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்துவந்தார். நாங்கள் தற்போது, எங்கள் பேனரில் 'கொடிவீரன்' என்ற சினிமாப் படத்தை தயாரித்து வரும் 30ம் தேதி வெளியிடத் தயாராக இருந்தோம். அதற்கு முன்பு எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் 'தாரை தப்பட்டை' என்ற படத்தை வெளியிட்டோம். அதற்கு சென்னை தி.நகர், ராகவா சாலையில் வசிக்கும் ஃபைனான்ஸியர் மதுரை அன்புச்செழியனிடம் கடனாகப் பணம் வாங்கியிருந்தோம். அதற்கான வட்டியையும் செலுத்தி வந்தோம். மேற்படி படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்பதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது தயாரித்து வெளியிட தயாராக இருந்த கொடிவீரன் படத்தினை வெளியீடு செய்வதற்காக வேலை நடந்து கொண்டிருந்தது.  
 

அசோக்குமார்

இந்தநிலையில் அன்புச்செழியன் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தினை அசல் மற்றும் வட்டி, வட்டிக்கு வட்டி போட்டு ஒரு பெரும் தொகையினை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இல்லையென்றால் கொடி வீரன் படத்தை வெளியிட விட மாட்டேன் என்று கடுமையாக நெருக்கடி கொடுத்து வந்தார். நான் எனது அடுத்த படவேலையில் இருந்ததால் இணை தயாரிப்பாளர் என்ற முறையில் அசோக்குமார் மேற்கண்ட கடன் பிரச்னையைக் கையாண்டு வந்தார்.  அன்புச்செழியன், என்னைப்பற்றியும், எங்கள் குடும்பத்தைப் பற்றியும் மிகவும் கீழ்தரமாகவும் அநாகரிகமாகவும் பேசுவதாகக் கூறி அசோக்குமார் வருத்தப்பட்டு வந்தார். நான் அதற்கு வருத்தப்பட வேண்டாம் என்று கூறிவந்தேன். இந்தநிலையில் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் கொடிவீரன் படத்தை வெளியிட விட மாட்டேன் என்றும் எங்கள் வீட்டுப் பெண்களைத் தூக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக வட்டிக்கு வட்டி என்று பணம் வாங்கி வந்தார் அன்புச்செழியன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, கந்துவட்டி கேட்டு மிரட்டியதோடு அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகுமார் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 
 அடுத்து, சசிகுமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன் விவரங்களை ஆதாரத்துடன் கொடுத்துள்ளார். அதன்பேரில்தான் போலீஸார் அன்புச் செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 தற்போது அன்புச் செழியன் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்ட சுவடு மறைவதற்குள் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!