வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (22/11/2017)

கடைசி தொடர்பு:19:10 (22/11/2017)

`தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பார்களா?' - முதல்வருக்கு திருமாவளவன் கேள்வி

தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பிற மாநிலத்தவர் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
 
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர் பங்கேற்பது தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதற்கே வழிவகுக்கும். 2017-ம் ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 81.3 லட்சம் பேர் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். அதில் 2.45 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள். சென்னையில் உள்ள ஐந்து வேலைவாய்ப்பகங்களில் மட்டும் 9 லட்சம் பேர் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். இப்படி தமிழக இளைஞர்கள் வேலையின்றி திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளைப் பிற மாநிலத்தவருக்குத் திறந்துவிடுவது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத்தான் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையல் மாநில அரசுப் பணிகளையும் பிற மாநிலத்தவருக்குத் திறந்து விடுவது தமிழக மக்களுக்குச் செய்யும் தீங்காகவே கருதப்படும்.

மஹாராஷ்ட்ரா, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பார்களா, பீகார் மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவருக்குத்தான் வேலை தர வேண்டும். அதற்காகச் சட்டம் இயற்ற வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் கூறி வருகின்றனர். மும்பையில் நடைபெற்ற மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வை எழுதச் சென்ற பீகார் மாநிலத்தவரை சிவசேனா கட்சியினர் தாக்கியதை நாம் அறிவோம். இந்தச் சூழலில் பிற மாநிலத்தவரைத் தமிழக அரசுப் பணிகளில் அனுமதிப்பதால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அவர்களிடம் தேவையற்ற பதற்றத்தையும்தான் உருவாக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்து இந்த முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.