உயிருக்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறிய குடும்பம்...கண்டுகொள்ளாத கலெக்டர்! | A tragic story of a family which, a Collector too ignored

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (22/11/2017)

கடைசி தொடர்பு:20:25 (22/11/2017)

உயிருக்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறிய குடும்பம்...கண்டுகொள்ளாத கலெக்டர்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஊருக்கு பயந்துகொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறது. இதனால் இக்குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகளின் கல்வி கேள்விக் குறியாக இருந்து வருகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகிறார்கள்.

இதுப்பற்றி பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், ''எங்கப்பா பேரு குப்புசாமி. அம்மா பேரு கருப்பாத்தா. இவர்களுக்கு நான், முத்துச்சாமி, பிரகாஷ் என மூணு பசங்க. நாங்க பொறந்து வளந்ததெல்லாம் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டி செல்லிப்பாளையம் காலனி. 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடிவந்து சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி வாழ்ந்துட்டு இருக்கிறோம். எங்க மூணு பேருக்கும் திருமணம் ஆகி குழந்தை குட்டிகளோடு இருக்கிறோம்.
 
இந்த ஊரில் இருக்கும் பொது கோயில்களான பட்டத்து அரசியம்மாள், கருப்பராயன், கன்னிமார் சாமிகளுக்கு 40 வருடமாக வரி கொடுத்துட்டு இருக்கிறோம். தற்போது அவுங்க குலதெய்வம் பெருமாள் கோயில் கட்ட எங்க வீட்டில் தலைக்கு 2000 ரூபாய் வீதம் 3 பேருக்கு 6000 ரூபாய் வரி கேட்டாங்க. நாங்க கூலி வேலைக்குப் போயிட்டு குடும்பம் நடத்துவதே கஷ்டமாக இருக்கும்போது எப்படி 6000 ரூபாய்  கொடுக்க முடியும். அதுவும் உங்க குலதெய்வத்துக்கு நாங்க எதுக்குக் கொடுக்கணும் என்று கேட்டோம். வரி கொடுக்கவில்லை என்றால் ஊரை காலி பண்ணிட்டுப் போயிடுங்க. இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினாங்க. 50 குடும்பமும் சேர்ந்து தொடர்ந்து மிரட்டல் விட்டதால் வீட்டை பூட்டு போட்டுட்டு தலைமறைவாக ஆளாளுக்கு ஒரு இடத்துக்குப் போயிட்டோம்.

கருமாண்டி செல்லிப்பாளையம் நடுநிலைப் பள்ளியில் என் தம்பி சக்திவேலின் குழந்தைகள் நவீன்குமார் 5ம் வகுப்பும், கவிப்பிரியா 4ம் வகுப்பும், இன்னொரு தம்பி பிரகாஷின் குழந்தைகள் வேணுபிரசாத் 4ம் வகுப்பும், சஜித்பிரசாத் 1ம் வகுப்பும் படிச்சுட்டு இருந்தாங்க. நாங்க ஊரை விட்டு 20 நாள்களாக தலைமறைவாக இருப்பதால் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப முடியாமல் தவிக்கிறோம். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. அந்தக் கிராமத்துக்குப் போனால் எங்களை உண்மையில் கொலை செய்து விடுவார்கள். இதுபற்றி கலெக்டரிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை'' என்று கண்ணீர் விட்டு அழுதார்.  


[X] Close

[X] Close