`சேகர் ரெட்டி உருவான கதை தெரியுமா..?' - மு.க.ஸ்டாலின் விளக்கம் | Stalin Slams Tamilnadu Government

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/11/2017)

கடைசி தொடர்பு:20:19 (22/11/2017)

`சேகர் ரெட்டி உருவான கதை தெரியுமா..?' - மு.க.ஸ்டாலின் விளக்கம்

சேகர் ரெட்டி உருவானதற்கு யார் காரணம் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

 

இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், `தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க அ.தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் உள்ள முக்கியப் பகுதிகளான காவிரி டெல்டா, தாமிரபரணி, பாலாற்றில் எல்லாம், அ.தி.மு.க அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போது பொதுப்பணித்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தங்கு தடையின்றி மணல் கொள்ளை ஏகபோகமாக நடைபெற்று, சேகர் ரெட்டி என்ற ‘மணல் மாஃபியா’ உருவான கதை இன்றைக்கு சி.பி.ஐ. வரை சென்றிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்த 35-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை ‘மணல் மாஃபியாக்கள்’ சூறையாடி, நிலத்தடி நீருக்குக் கேடு விளைவித்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், கிராம மக்களும் சளைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் உள்ள குவாரிகளில் பொதுப்பணித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக மணல் தோண்டியெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மணல் குவாரிகளுக்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன. மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ‘ராஜேஷ் லக்கானி கமிட்டி’ ஒரு விசாரணை அறிக்கையே கொடுத்து, அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

அதுமட்டுமின்றி, மணலுக்கு மாற்றாகச் செயற்கை மணல் (M.Sand) தயாரிக்க விண்ணப்பித்த கம்பெனிகளுக்கு அனுமதி வழங்குவதில் அ.தி.மு.க. அரசு தாமதம் செய்தது ஏன். தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் பறிபோவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை அனுமதிக்க அரசு மறுப்பது ஏன் என்ற கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

மணல் செயற்கையாக விலை ஏறுவதற்கு வித்திட்டுள்ள அரசு இப்போது மணல் விலையைக் கட்டுப்படுத்த, 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது நிச்சயமாக சுயநோக்குப் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு என்று தெளிவாகிறது. தமிழகத்தைச் சிறிது சிறிதாகப் பாலைவனமாக்க முயற்சி செய்யும் இந்த அறிவிப்பு, விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை முழுவதும் சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக கட்டுமானத் தொழில்களை முடக்கும் விதத்தில் மணல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கிய அரசு, ‘கிராவல் மண்’ எடுக்க அனுமதி வழங்கிய கையோடு, 70 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை எடுத்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

ஏற்கெனவே மணல் குவாரிகளில் வேளாண் பொறியியல் துறையில் உள்ள பொக்லைன் இயந்திரங்களைக் கூட பயன்படுத்தாமல், தனியார் பொக்லைன் இயந்திரங்களை விட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, காவிரி டெல்டா பகுதிகள், பாலாறு பகுதிகள், தாமிரபரணி பகுதிகள் எல்லாம் பாழாகும் வகையில் மணல் தோண்டி எடுக்கப்பட்டதை இந்த அ.தி.மு.க அரசு தாராளமாக அனுமதித்தது. அதே போன்றதொரு இயற்கை வள மோசடிக்கு இந்த 70 மணல் குவாரிகளைப் பயன்படுத்தி, சுற்றுப்புறச் சூழலுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழக நலன் கருதி புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும். அப்படிக் கைவிடத் தவறினால், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.