அமைச்சரின் பாதுகாப்பில் இருக்கிறாரா அன்புச்செழியன் ? #VikatanExclusive

அன்புச்செழியன்

திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதற்கு சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், அவர் தமிழகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சசி குமாரின் உறவினர் அசோக்குமார். இவர், சசி குமாரின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்ததுடன், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் அசோக்குமார் நேற்றிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 'என் தற்கொலைக்கு சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்தான் காரணம்' என்று அவர் கடிதம் எழுதிவைத்திருந்தார். இதைத்தொடர்ந்து வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சசி குமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அன்புச்செழியன் மீது கிரிமினல் சட்டப்பிரிவு 306-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கந்துவட்டிக்குப் பணம் வழங்கிவரும் அன்புச்செழியன் கொடுக்கும் நெருக்கடி காரணமாக, நிறைய சினிமா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று திரைப்படத்துறையினர் காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினரும் அன்புச்செழியனை தேடி வருவதாகச் சொல்லிவந்தனர். இந்நிலையில் சினிமாத் துறையில் முக்கியப் புள்ளியாக விளங்கிய அன்புச்செழியனுக்கு எதிராகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டிருப்பதால், தன்னை எப்படியும் போலீஸார் கைதுசெய்து விடுவார்கள் என்று தெரிந்துகொண்டு, நேற்றிரவே அவர் தமிழகத்தின் முக்கிய அமைச்சரின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்றுவிட்டதாகக் காவல்துறையிடம் இருந்தே தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர், "மதுரையிலிருந்து சென்னை வந்து ஃபைனான்ஸ் செய்துவந்த அன்புச்செழியனின் பின்புலமே அவரின் ஜாதி பலம்தான். ஏற்கெனவே மதுரையில் சிறிய அளவில் ஃபைனான்ஸ் செய்து வந்தவர், ஒருகட்டத்தில் திரைப்படங்களை விநியோகிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்தார். அந்த வளர்ச்சிதான் அவருக்கு அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அரசியல்வாதிகள் தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை, அன்புச்செல்வனிடம் கொடுத்து ஃபைனான்ஸ் செய்வதன் மூலம் வெள்ளையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அதிகளவு பணம் பெருகிவிடவே அந்தச் செல்வாக்கால் சென்னைக்கு வந்து திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யத் தொடங்கினார். அரசியல் பின்புலம் இருந்ததால், எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் மிரட்டி, அதிக வட்டியைக் கறாராக வசூல் செய்துவிடுவது அன்புச்செழியனின் வழக்கம். இந்தநிலையில், இவருக்குச் சில ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவரின் மகனுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், முன்பு இருந்ததைவிடவும் அதிக செல்வாக்குடன் தன் தொழிலை விரிவுபடுத்தினார். சம்பந்தப்பட்ட அமைச்சரோ, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே பவர்ஃபுல்லாக வலம் வந்தவர் என்பதால், அன்புச்செழியனின் சாம்ராஜ்யமும் அதிகரித்தது. பணிவுக்குப் பெயர்போன அந்தத் தென் மாவட்ட அமைச்சரின் மகனும், அன்புச்செழியனும், அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துப் பேசிக்கொள்வது வழக்கம். 

அசோக்குமார் கடிதம்

அமைச்சரின் மகனிடமும் சினிமா ஃபைனான்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றி அன்புச்செழியன் ஆசைகாட்ட, அவர் தங்களிடம் இருந்த கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை அன்புச்செழியன் மூலம் சினிமாத் துறையில் முதலீடு செய்துள்ளார். சமீபத்தில்கூட ஒரு திரைப்பட விநியோகப் பிரச்னை ஏற்பட்டு, அதன் தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் பிரச்னை செய்தபோது, அமைச்சரின் மகனே நேரடியாகத் தலையிட்டு, அந்தத் தயாரிப்பாளரிடம் பேசி 'பணத்தை ஒழுங்காக செட்டில் செய்துவிடுங்கள்' என்று மிரட்டியுள்ளார். அந்த அமைச்சருக்குச் சமீபத்தில் இறங்குமுகம் ஏற்பட்டபோதும், அவர் வீட்டில் அன்புச்செழியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. அமைச்சரின் மகனுடன் அந்த வீட்டிலேயே அன்புச்செழியன் உலா வந்தது அனைவரும் அறிந்ததே.

 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 

 

 

 

அன்புச்செழியனிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கிடப்பதற்கு அந்த அமைச்சரின் மகனும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்நிலையில் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதும், அன்புச்செழியன் அமைச்சரின் மகனுடன் தொடர்புகொண்டு தன்னைக் காப்பாற்றும்படிக் கேட்டுள்ளார். அன்புச்செழியன் சிக்கினால் தானும் சிக்கவேண்டிய சூழல் உருவாகும் என்பதால், அவரைக் காப்பாற்ற முயன்ற அமைச்சரின் மகன், இரவோடு இரவாக அன்புச்செழியனை தன் வீட்டிற்கு வரவழைத்துத் தங்க வைத்துக் கொண்டார். அமைச்சர் ஆதரவுடன், ரகசியமான ஓர் இடத்தில் அன்புச்செழியனை தங்க வைத்துவிட்டனர். மேலும் அமைச்சரிடம் சொல்லி, காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் அன்புச்செழியன் விஷயத்தில் தீவிர தேடுதல்வேட்டை நடத்த வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்களாம். விரைவில் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெறுவதற்கான வேலைகளில் அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியுள்ளார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து அன்புச்செழியன் தப்பித்தாலும், மீண்டும் இவரது அதிகாரப்போக்கு சினிமாத் துறையில் தொடரும். அதைக் கட்டுபடுத்த முடியாது. காரணம், இவர் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அன்புச்செழியன் தேவைப்படும் நபராக இருக்கிறார்” என்று பேசி முடித்தார் அந்த அதிகாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!