வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (22/11/2017)

கடைசி தொடர்பு:22:20 (22/11/2017)

அரசியல் களம் எப்போது? - ரஜினிகாந்த் பதில்

அரசியல் களத்தில் இறங்குவது எப்போது என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

ரஜினிகாந்த்

 

நடிகர் ரஜினிகாந்த் சில நாள்களுக்கு முன்னர் ரசிகர்களைச் சந்தித்தபோது, “சிஸ்டம் கெட்டுப்போய் விட்டது. அதைச் சீரமைக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்” என்று அரசியல் பிரவேசம் தொடர்பான கருத்துகளை வெளியிட்டார். இதையடுத்து அவர் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

நடிகர் கமல்ஹாசனும் இன்னொரு புறம் அரசியலில் ஈடுபடுவதற்கான முனைப்பில் இருக்கிறார். நடிகர்  சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அரசியலில் வெற்றி பெறுவது பற்றிய ரகசியம் கமல்ஹாசனுக்குத் தெரியும். ஆனால், அவர் அதை எனக்குச் சொல்ல மாட்டார்” என்று மேடையில் அமைச்சர்களை வைத்துக் கொண்டே பரபரப்பாகப் பேசினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி கண்ட செய்தியாளர்கள், “அரசியலில் களம் இறங்குவது எப்போது” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்குப்பதில் அளித்த ரஜினிகாந்த், “களம் இறங்குவதற்கு தற்போது அவசரம் இல்லை” என்றார். மேலும், 'காலா' பட சூட்டிங் முடிந்து விட்டதாகவும், டிசம்பர் 12-ம் தேதி தன் பிறந்த நாளுக்குப்பின் ரசிகர்களைச் சந்திப்பேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.