வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (22/11/2017)

கடைசி தொடர்பு:10:51 (23/11/2017)

பாட்டியிடம் லாகவமாக பேசி நகை, பணத்தை அபேஸ் செய்த கொள்ளையன்!

சொந்தக்காரன் போல் பேசி பாட்டியிடம் 3 பவுன் நகை,10 ஆயிரம் பணத்தை லாகவமாக திருடிச்சென்றிருக்கான் திருடன் ஒருவன். போனவன் இன்னும் வரவில்லையே எனப் பரிதாபமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஒரு பாட்டி.

                     
அரியலூர் மாவட்டம் பெரிய அரண்மனை தெருவில் வசித்து வருபவர் ஆண்டாள் பாட்டி. இவர் காலை அவரது வீட்டின் முன்பு அமர்ந்து  வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் பாட்டியிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறான். பாட்டி நான் ரொம்ப தூரத்திலிருந்து வருகிறேன் கொஞ்சம் தண்ணீர் தாங்க பாட்டி என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் தண்ணீர் கொடுக்க. கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சுக் கொடுத்து நலம் விசாரித்திருக்கிறார். பின்பு பாட்டி நீங்க ரொம்ப பலகினமாக இருக்கிறீங்க ஹார்லிக்ஸ் வாங்கிச் சாப்பிடுங்கனு சொல்லி ரூ.500 பணத்தை கொடுத்திருக்கிறார்.

                         

பின்பு அந்த மர்ம நபர் பாட்டி நீங்க கழுத்தில் எந்த நகையும் அணியாமல் வெறும் கழுத்தோடு இருக்குறீர்களே என அக்கரையுடன் கேட்டிருக்கிறான். என் நண்பர் நகைக் கடை வைத்திருக்கிறான் உங்களுக்கு நகை எடுத்துட்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். உறவினர் போல் அக்கறையுடன் பேசியதால் அதை நம்பிய ஆண்டாள் தனது செயின் பீரோவில் இருப்பதாகக் கூறி பீரோவில் இருந்த 3 பவுன் செயினை எடுத்துவந்து காட்டியுள்ளார். இதனை மாற்றித் தருவதற்கு 10 ஆயிரம் பணத்தையும் கொடுத்திருக்கிறார். பாட்டி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லியிருக்கிறார். பாட்டி உள்ளே சென்றதும் வண்டியை எடுத்து வேகமாக பறந்திருக்கிறான் அந்த மர்ம நபர்.

                        
பாட்டி நகை வாங்க கடைக்குத்தான் போயிருக்கிறான் என்று காத்துக்கொண்டிருந்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆண்டாள் பாட்டி சம்பவத்தைச் சொல்லியிருக்கிறார். 

                      
இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர் ஏமாற்றப்பட்டதைக் கூறி, அரியலூர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். அரியலூர் போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்ட பகலில் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை பேசி 3 பவுன் நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றவனை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.