வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (23/11/2017)

கடைசி தொடர்பு:00:40 (23/11/2017)

இலங்கைக் கல்வி நிறுவனத்துடன் நெல்லை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்!

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் நெல்லையின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கல்வி ஒப்பந்தம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டு யுனிவர்சிட்டிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக இலங்கை மற்றும் கனடாவிலிருந்து இங்கு வந்து ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களை இரு பல்கலைக் கழகங்களும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும். அத்துடன், ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளை இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. 

அதன்படி, அடுத்த மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்த்துறை நாட்டார் வழக்காற்றியல் பயிலரங்கில் இங்குள்ள பேராசிரியர் ஸ்டீபன் பங்கேற்க உள்ளார். 2018 பிப்ரவரி மாதத்தில் நெல்லை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை சார்பாக நடைபெறும் உலகத் தமிழ் இலக்கிய வரைபடம் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து இரு பேராசிரியர்களும் 20 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் காட்சி மானுடவியலும் நாட்டார் வழக்காற்றியலும் என்ற துறைக்கும் இலங்கைத் தமிழர் நடனங்கள் என்ற துறைக்கும் பாடத்திட்டத்தை வடிவமைக்க நெல்லை பலகலைக் கழக பேராசிரியர் அழைக்கப்பட்டுள்ளார். விலங்கியல் துறையின் பாடத்திட்டத்தை மறுசீரமைக்க விலங்கு அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் பலவேசம் அழைக்கப்பட்டுள்ளார்.

ஒப்பந்தம்

இது தவிர, இலங்கையின் யாழப்பாணப் பல்கலைக்கழகமும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதால் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே நெல்லை பலகலைக்கழகத்தில் கனடா, இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தங்கள் நெல்லை மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனப் பல்கலைக்கழக துணை வேந்தரான பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.