வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (23/11/2017)

கடைசி தொடர்பு:10:35 (23/11/2017)

இடித்துத் தள்ளப்படும் கூவம் நதியோர வீடுகள்.. தூய்மையாகிவிடுமா சென்னை?!

கூவம், cooum chennai

அக்டோபர் 28. மதியம் 3 மணி. திடீர் நகர்ப் பகுதியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், அந்தப் பகுதி மக்களின் வீடுகள் ஒவ்வொன்றுக்கும் சென்று, கதவைத் தட்டி, ''உங்களுக்குப் பெரும்பாக்கத்துல வீடு ஒதுக்கி இருக்காங்க... இன்னும் ரெண்டு நாள்ல காலி பண்ணிடுங்க’' என்று கூறி, ஒவ்வொரு வீட்டுக்கும் டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். இதைக் கேட்ட பொதுமக்கள் அங்கு வந்திருந்த அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களோ, ''இரண்டு நாள் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். திங்கள் கிழமை வருகிறோம். அதற்குள் காலி செய்துவிடுங்கள்'’ என்று கூறியிருக்கிறார்கள்.

திங்கள் கிழமை காவல் துறையின் பாதுகாப்போடு வந்த அரசு அதிகாரிகள், திடீர் நகர் மக்களை வெளியேறக் கூறினர். மக்கள் இணைந்து, ''நாங்கள் இந்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதாக இல்லை'' என்று கூறினர். அன்றைய நாள் மழை பெய்ததால், மக்களை வெளியேற்ற இயலவில்லை. புதன்கிழமை மீண்டும் வருவதாகக் கூறிவிட்டு, அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

கூவம், cooum chennai

திடீர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த நான்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்று மாதங்கள்வரை அரசுக்கு மக்களை வெளியேற்றுவதற்குத் தடை உத்தரவு பெற்றுள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் பற்றி நான்சி விவரித்தது இதுதான்.

''சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள க்ரீம்ஸ் ரோட்டில் அமைந்திருப்பது திடீர் நகர். இது, கூவம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திடீர் நகருக்கு நேர் எதிரே இருக்கும் அப்போலோ மருத்துவமனையில்தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தப் பகுதியில் பல்வேறு விடுதிகளும் உள்ளன.

திடீர் நகர்ப் பகுதியில் கடந்த எழுபது ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏறத்தாழ மூவாயிரம் குடும்பங்கள், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றன. இங்குள்ள மக்கள் நுங்கம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பணிசெய்து வருகின்றனர். தங்கள் குழந்தைகளையும் அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு, இந்தப் பகுதியில் இருந்த குடிசை வீடுகள், தகர கூரைகள் பொருத்தப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன. அந்தப் புதுப்பிக்கப்பட்ட வீடுகள் அன்றைய மேயர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முரசொலி மாறனால் திறந்துவைக்கப்பட்டது. திடீர் நகர் மக்கள், அரசு அளித்திருக்கும் அனைத்து அடையாள அட்டைகளையும் வைத்திருக்கின்றனர்.

2001-ம் ஆண்டு தமிழக அரசு திடீர் நகர்க் குடியிருப்புகளை அங்கீகரித்து, புதிய குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தது என்றாலும், இப்போது வெளியேறச் சொல்வதன் காரணம் என்னவாக இருக்கும் என அப்பகுதி மக்களிடையே குழப்பம் நிலவுகிறது''.

cooum, கூவம்

''எங்க பகுதியில எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லை. ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு வெறும் அஞ்சு கக்கூஸ்தான் இருக்கு. தண்ணி வசதியும் இல்லை. ஒரு சின்ன பள்ளிக்கூடம் இருக்குது. ஆனா அங்கேயும் ஒழுங்கான வசதி கிடையாது. இங்க வீடு கட்டிக் குடுத்தப்போ சின்னதா ஒரு ஆஸ்பத்திரி கட்டி கொடுத்தாங்க. இப்போ ரெண்டு வருசமா அந்த ஆஸ்பத்திரி பில்டிங்கே குடோன் மாதிரி இருக்குது'' என்று திடீர் நகரின் நிலையைப் பற்றிக் கூறினார் ஸ்டெல்லா. 

தொடர்ந்து, ‘'எங்க வீடுங்க, கூவம் காவா ஓரம் இருக்குது. 2015-ல வெள்ளம் வந்தப்போ எங்க வீடு எல்லாம் மூழ்கிப்போச்சு. அதனால, எங்களை இந்த இடத்தைவிட்டுக் காலி பண்ணச் சொல்றாங்க. எங்களைக் காலியெல்லாம் பண்ண வேணாம். காவா ஓரம், ஒரேயொரு சுவரு மட்டும் கட்டிக் கொடுத்தா போதும்’' என்று கூறி, கூவம் ஆற்றின் மறுபக்கம் அமைந்திருந்த தனியார்க் கல்லூரியின் சுவரைக் காட்டினார்.

இதைப் பற்றி திடீர் நகர்ப் பகுதியில் சமூக நலத்திட்ட உதவிகளைச் செய்து அறக்கட்டளை நடத்திவரும் வேளாங்கன்னி பேசுகையில், ‘'திடீர் நகரில் எந்த வசதியும் கிடையாது. இங்கு ஓடும் கூவம் ஆற்றில்தான் அனைத்துக் கழிவுகளும் கலக்கின்றன. இவற்றைக் கேட்பதற்கு யாரும் இல்லை. அருகில் இருக்கும் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகளும் இங்குவந்து கலக்கின்றன. இப்படி அடிப்படை வாழ்வாதாரமே இல்லாமல் எங்கள் மக்களைத் துரத்திவிட முயற்சி செய்துகொண்டிருந்த அரசாங்கம், இப்போது நேரடியாகவே எங்களை நீக்கிவிட முயற்சி செய்கிறது'' என்றார்.

திடீர் நகர் அமைந்திருக்கும் க்ரீம்ஸ் ரோடு பகுதியின் சாலையோரம் அப்போலோ மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனங்கள் நிற்கின்றன. அவற்றுக்கு நிரந்தரமாக வாகன நிறுத்துமிடம் எதுவும் இல்லாததால், அதற்கான ஏற்பாடாகவும் இது இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

ரங்கூன் தெரு, மக்கீஸ் கார்டன் பகுதி 

cooum, கூவம்

திடீர் நகர்ப் பகுதி மக்களுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் அளித்ததுபோல், ரங்கூன் தெரு, மக்கீஸ் கார்டன் பகுதி மக்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே காலி செய்துவிடும்படி அறிவிப்பு வந்துவிட்டது. அவர்களுடைய வீடுகளை இடிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டது.

கூவம், cooum

''சின்ன மழை வந்தாலே தெரு முழுவதும் தண்ணீர் நின்று, சேறும்சகதியும் ஆகிவிடும். கழிப்பிட வசதி உள்பட வேறு எந்த அடிப்படை வசதிகளும் எங்களுக்கு இல்லை. பெரும்பாக்கத்தில் தரப்படும் வீடுகளில் அடிப்படை வசதிகள் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக இங்கு வசித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாக்கம் போவதால் எங்கள் தொழில்களும், குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்படும். வேறுவழி எதுவும் இல்லாததால் ஒப்புக்கொண்டோம். இந்த இடத்தைவிட்டுப் போய்த்தானே ஆக வேண்டும்'’ என்றார் ராஜேஷ்வரி.

பகுதி மக்கள் பாதிக்காதவண்ணம் அரசு கவனமுடன் செயல்பட வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்