வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (23/11/2017)

கடைசி தொடர்பு:12:00 (23/11/2017)

அமைச்சர்கள் மிரட்டும் தொணியில் பேசுவதா? : கோவையில் கடுகடுத்த பிரகாஷ்ராஜ்

'கமல்ஹாசன்  ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றால், அதற்கு அமைச்சர்கள் ஆதாரத்தைத் தர வேண்டும். இல்லையெனில், சட்டபூர்வமாகச் சந்திக்கட்டும். அதை விட்டுவிட்டு, மிரட்டும் தொணியில் பேசக்கூடாது' என கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜ்
 

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பதை இவரது தற்கொலை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற முடிவை யாரும் எடுக்கக்கூடாது. இதுபோன்ற பல தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அது யாருக்கும் தெரியாது . நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். முதலில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில், வரி செலுத்தியும் பாதுகாப்பில்லாத துறையாக இந்தத்துறை இருக்கிறது. திருட்டு வி.சி.டி-க்களை ஒழிக்க வேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தையும் எங்களையும் வந்து அணுகலாம். 'பத்மாவதி' திரைப்படத்தில் நடித்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதும், அதுவும் ஆளுங்கட்சி சார்ந்தவர்களே இதுபோன்ற செயலில் ஈடுபவது, நாம் எந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அரசு அமைதிகாப்பது தவறு. தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என எண்ணி கமலும் ரஜினியும் அரசியலுக்கு வரலாம். கமல் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றால், அதற்கு அமைச்சர்கள் ஆதாரத்தைத் தர வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமாகச் சந்திக்கட்டும். அதைவிட்டு விட்டு மிரட்டும் தொணியில் பேசக்கூடாது" என்றார்.