வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (23/11/2017)

கடைசி தொடர்பு:09:19 (23/11/2017)

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஈஷா படம் அகற்றம்!

கோவை - சென்னை சேரன் ரயிலில், கோவையின் அடையாளமாக ஒட்டப்பட்டிருந்த ஈஷா படம் நீக்கப்பட்டுள்ளது.

சேரன் ரயில்

கோவை – சென்னை சென்ட்ரல் இடையே, தினசரி சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது வழக்கம். கோவை ரயில் நிலையத்திலிருந்து, தினசரி இரவு 10.40 மணிக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, தினசரி இரவு 10.10 மணிக்கும் இந்த ரயில் புறப்படும். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயிலில் பயணித்துவருகின்றனர்.

இதனிடையே, கடந்த 10-ம் தேதி முதல், இந்த ரயிலில் அதிநவீன எல்.ஹெச்.பி பெட்டிகளாக மாற்றம்செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பெட்டிகளில், கோவையின் அடையாளமாக ஈஷா யோகா மையத்தின் படம் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சேரன் ரயில்

கோவைக்கு அடையாளமாக பஞ்சாலைகள், இயற்கைக் காட்சிகள் என ஏராளமான விஷயம் இருக்கையில், ஈஷா படத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. குறிப்பாக, ஈஷா படத்தை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் கோட்ட மேலாளருக்கு, சமூகநீதிக் கட்சி கடிதம் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, தற்போது சேரன் ரயிலிலிருந்து, ஈஷா படம் அகற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, கோவை ரயில் நிலையத்தின் படம்  ஒட்டப்பட்டுள்ளது.