வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (23/11/2017)

கடைசி தொடர்பு:09:15 (23/11/2017)

இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை, யாருக்கு என்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம்  இன்று தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்தனர். மேலும், கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஆதரவுடன் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்தனர். இணைந்த அவர்கள்,  இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வருகின்றனர். மறுபுறம்,  சசிகலா, தினகரன் தரப்பில் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று கூறி, தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.