வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (23/11/2017)

கடைசி தொடர்பு:10:44 (23/11/2017)

'ஆதாரமில்லாமல் போகிறபோக்கில் புழுதிவாரித் தூற்றக்கூடாது'! விஷாலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

'நடிகர் விஷால் கூறுவதுபோல, அன்புச் செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அசோக் குமாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ‘அன்பு செழியனுக்கு சாதகமாக எம்.எல்.ஏ., வந்தாலும் அமைச்சர் வந்தாலும் விட மாட்டோம். இதுவரை அன்புச் செழியன்  கைது செய்யப்படமால் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அரசு சரியாக நடக்குதா இல்லையா என்பதைப் பார்ப்போம்; முறையாக இந்த விஷயத்தில் முதல்வரைச் சந்திப்போம்’ என்று பேசியிருந்தார்.   

விஷால் பேசியதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘நடிகர் விஷால் கூறுவதுபோல அன்புச் செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை. நடிகர்கள் நிதி திரட்டி, சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு ஏன் நிதியுதவி செய்யக்கூடாது. நடிகர்கள் தலா ரூ.1 கோடி என ரூ.500 கோடி சுழற்சிநிதி திரட்டி, தயாரிப்பாளர்களுக்கு உதவலாமே. ஆதாரமில்லாமல் போகிறபோக்கில் விஷால் புழுதிவாரித் தூற்றியுள்ளார். அரசுக்கு நடிகர்கள் இலவச ஆலோசனை மட்டுமே தரக்கூடாது’ என்றார்.