தினகரன் கட்டிய மைதானம்! கண்டுகொள்ளாத ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. இன்றும் நாளையும் நடக்கும் இப்போட்டிகளில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், போட்டிகளைத் தொடங்கிவைத்தார். நாளை, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, ஹாக்கி போன்ற போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

ஹாக்கிப் போட்டி மட்டும் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் என்பதால், வீரர்கள் சற்று சிரமத்தைச் சந்திக்கிறார்கள். மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும். இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தைச் சரிசெய்ய வேண்டும் என்பது பலநாள் கோரிக்கையாக உள்ளது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில், டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரம்தான், தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கு கட்டப்பட்டது.

அதனால்தானோ என்னவோ, இன்று வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் அக்கறைசெலுத்தாமல் இருக்கிறார், தற்போதைய துணைமுதல்வர் பன்னீர்செல்வம் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரங்கள். தேனி மாவட்டத்தில் உள்ள மாணவ-மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தைக் கருத்தில்கொண்டு, தேவையான வசதிகளை ஏற்படுத்தி, அவர்களின் திறமையை மேம்படுத்த இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!