வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (23/11/2017)

கடைசி தொடர்பு:14:35 (23/11/2017)

'இந்த மூன்று பேர் கூட்டணியை உடைக்கணும்'- சீறும் திருமாவளவன்

'தமிழ்நாட்டில், கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால், அது மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலியில் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய கந்துவட்டி, இப்போது சென்னையில் திரைப்படத் துறையைச்சேர்ந்த ஒருவரின் உயிரைக் குடித்திருக்கிறது. கந்துவட்டியைத் தடைசெய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அந்தக் கொடுமை தொடர்வதற்கு காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம். கள்ளச்சாராய சாவு நேரிட்டால், எப்படி அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை அரசு பொறுப்பேற்கச் செய்கிறதோ, அப்படி கந்துவட்டி தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால், அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்துவட்டிக் கொடுமை, சமூகத்தில் பல்வேறு தீங்குகளை உருவாக்குகிறது. கறுப்புபணம் வைத்திருப்பவர்கள், அதைக் கந்துவட்டித் தொழிலில் முதலீடுசெய்கிறார்கள். அது, கறுப்புப் பணத்தை மேலும் பெருகச்செய்கிறது. கறுப்புப்பண ஒழிப்பில் தீவிரமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு, வருவாய் புலனாய்வுத்துறையின்மூலம் கந்துவட்டிக்காரர்களை விசாரிக்க வேண்டும். அவர்கள்மீது PMLA சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டியை ஒழிப்பது என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு பொருளாதார தற்சார்பை உருவாக்குவதோடு தொடர்புகொண்டதாகும். சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழல் நிதி வழங்கப்பட்ட பிறகு, கிராமப்புறங்களில் கந்துவட்டிக் கொடுமை சற்றே குறைந்தது. அந்த அனுபவத்தைக் கவனத்தில்கொண்டு, சுழல் நிதியின் அளவை அதிகப்படுத்துவதோடு, நகர்புறத்துக்கும் அந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். சிறு, குறு வணிகர்களே கந்துவட்டிக்குப் பணம் வாங்குவதில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு, சிறப்புக் கடனுதவித் திட்டத்தை வகுப்பதன்மூலம் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்க முடியும்.

வளரும் நாடுகளில் வறுமை ஒழிக்கப்பட, அங்குள்ள சிறு தொழில் முனைவோருக்கு வங்கிகள்  அல்லாமல் சிறிய அளவில்  கடன் உதவி வழங்கும் நுண் கடனுதவி நிறுவனங்களை (Micro Finance Corporations) அமைக்கலாம் என்று முகமது யூனுஸ் என்பவர் வங்கதேசத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டிய திட்டம், நல்ல பலனைத் தந்தது. அதற்காகவே, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை தமிழக அரசு நமக்கேற்ற விதத்தில் வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக்கொள்கிறோம்.

கந்துவட்டிக்காரர்கள், அரசியல்  கட்சியினர் மற்றும் காவல்துறையினர் ஆதாரவில்லாமல், அந்தத் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, கந்துவட்டிக்காரர்கள் – அரசியல்வாதிகள் – காவல்துறை அதிகாரிகள்  என்ற கூட்டணியை உடைப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில், கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால், அது இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும். இதை உணர்ந்து, காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.