வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (23/11/2017)

கடைசி தொடர்பு:17:05 (13/07/2018)

பாண்டியர் சோழர் கால செப்பு காசுகள் கண்டெடுப்பு! - அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த கச்சி வழங்கும் பெருமாள் காசு, ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகள் ஆகியன திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புல்லாணி அருகே கண்டெடுக்கப்பட்ட ஈழக்காசுகள்



ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி ஆவணப்படுத்திவருகின்றனர். இந்நிலையில், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த 'கச்சி வழங்கும் பெருமாள்' காசு, ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகள் ஆகியவற்றை இம்மாணவர்கள் தங்கள் தேடுதலின்போது கண்டெடுத்துள்ளனர். இவை அனைத்தும் செப்புக்காசுகள் ஆகும்.


இதுபற்றி இப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு கூறியதாவது, ''ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாணவர்கள் கண்டெடுத்த இந்தக் காசுகள், இப்பகுதியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. திருப்புல்லாணி இந்திரா நகரைச் சேர்ந்த இர.சமயமுத்து என்ற மாணவன் சென்ற ஆண்டு இவ்வூரில் கண்டெடுத்த ஒரு காசு அடையாளம் காணமுடியாத அளவில் இருந்தது. தற்போது அதை சுத்தம்செய்து பார்த்தபோது, அது பாண்டியர் காலக் காசு எனத் தெரிந்தது. இதன் ஒரு பக்கத்தில் “கச்சி வழங்கும் பெருமாள்” என நான்கு வரிகளில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மறுபக்கம் இரு மீன்கள் ஒன்றன்மேல் ஒன்று சாய்ந்த நிலையில் பெருக்கல் குறி வடிவில் உள்ளன. இரு மீன்களின் தலைக்கு நடுவில் பிறை உள்ளது.

திருப்புல்லாணி பகுதியில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்


இந்தக் காசு கி.பி.1250 முதல் 1284 வரை பாண்டிய நாட்டை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வெளியிடப்பட்டது.  இவன் சோழநாட்டைச் சேர்ந்த கச்சி எனப்படும் காஞ்சிபுரத்தைப் போரில் வென்று மீண்டும் சோழ இளவரசனிடமே கொடுத்ததால் 'கச்சி வழங்கும் பெருமாள்' எனும் பெயர் பெற்றான். மேலும், 'சுந்தரபாண்டியன்', 'எல்லாந்தலையனான்'ஆகிய பெயர்களிலும் இம்மன்னன் காசுகளை வெளியிட்டுள்ளான். பாண்டிய நாட்டைப் பேரரசு அந்தஸ்துக்கு உயர்த்திய இம்மன்னனின் கி.பி.1262-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயில் முதல் கோபுர வாயிலின் வலது பக்கச் சுவரில் உள்ளது. இக்காசு இங்கு கிடைத்துள்ளதன் மூலம் இப்பகுதியில் அது பயன்பாட்டில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

இதேபோல் கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த பஞ்சந்தாங்கியைச் சேர்ந்த தாஜ்குமார் என்ற மாணவனும், தற்போது 10-ம் வகுப்பு படித்துவரும் தாதனேந்தலைச் சேர்ந்த கு.சினேகா என்ற மாணவியும் ஈழக்காசுகளை அவர்கள் ஊர்களில் கண்டெடுத்துள்ளனர். இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு பந்துகள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகையின் அருகே தேவநாகரி மொழியில் 'ஸ்ரீராஜ ராஜ' என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கைக் காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான்.

இலங்கையை சோழர்கள் வென்றபின் அந்நாட்டின் புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இக்காசு பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம், களிமன்குண்டு ஆகிய ஊர்களில் நடத்திய அகழாய்வுகளில் இக்காசுகள் கிடைத்துள்ளன. தற்போது திருப்புல்லாணி பகுதிகளிலும் இக்காசுகள் கிடைத்துள்ளதன் மூலம், இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட ஈழக்காசுகள் சோழர்களின் ஆளுகையின்கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது'' என்றார்.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் அகழாய்வில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளிலும் தொல்லியல் துறையினர் முறையான அகழாய்வினை மேற்கொள்வதன் மூலம் பண்டைய தமிழர்கால வாழ்வியல் உலகுக்கு வெளியாவதுடன், இதுபோன்ற சுய தேடல்களில் ஈடுபட்டுவரும் மாணவ மாணவிகளுக்கு முறையான வழிகாட்டலும் ஆர்வமும் தோன்ற வழி ஏற்படும்.