வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (23/11/2017)

கடைசி தொடர்பு:15:33 (23/11/2017)

முதுகுக் கட்டிக்கு சிகிச்சை... இனோவா கார் பயணம்... ரவுண்ட்ஸிலேயே இருக்கிறாரா அன்புச்செழியன்? #VikatanExclusive

Anbuchezhiyan

திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன், முக்கிய நபர்களின் ஒத்துழைப்புடன் கேரளாவுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், அவரது மேனேஜருமான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன் என்பவர்மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அசோக்குமார் எழுதிய கடிதத்தில், அன்புச்செழியன் மிரட்டியதால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதனால், அன்புச்செழியனைக் கைதுசெய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தத் திரைத்துறையினரும் காவல் துறையிடம் கோரிக்கைவைத்துள்ளனர். 

இந்நிலையில், அன்புச்செழியனுக்கும் தமிழகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. அந்த அமைச்சர் மகன்தான் அன்புச்செழியனைப் பாதுகாத்து வருவதாகக் காவல் துறை தரப்பிலும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அன்புச்செழியனைத் தேடி அவருடைய சொந்த ஊரான மதுரைக்கு மூன்று தனிப்படைகள் அனுப்பப்பட்டு இருப்பதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, அன்புச்செழியன் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைத்தன.

“அன்புச்செழியனுக்கு நீண்டநாள்களாக முதுகில் கட்டி இருந்துள்ளது. இதனால் முதுகு வலியால் அன்புச்செழியன் அவஸ்தைப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முதுகில் இருந்த கட்டியை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அதன்பிறகு, மருத்துவமனையில்தான் ஓய்வில் இருந்துள்ளார் அன்புச்செழியன்.

அசோக்குமார் கடிதம்

அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட அன்று இரவுவரை, அன்புச்செழியனுக்கு தான் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளோம் என்ற விவரம் தெரியாமல் மருத்துவமனையில் படுத்துள்ளார். அன்று இரவு, அன்புச்செழியனுக்கு நெருக்கமான முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர்தான் அன்புச்செழியனிடம் சென்று, 'டி.வி-யில் உனது பெயர் ஓடிக்கொண்டிருக்கிறது' என்ற விவரத்தைச் சொல்லியுள்ளார். அந்த முன்னாள் பத்தரிகையாளர்தான் அன்புச்செழியனின் ஃபைனான்ஸ் புரோக்கராகச் செயல்பட்டு வருகிறார். அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில், தான் சிக்கப்போவது தெரிந்ததும், அமைச்சரின் மகனுக்குத் தொடர்புகொண்டு பேசியுள்ளார் அன்புச்செழியன். அதன்பிறகு, உடனடியாக மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அன்புச்செழியன் நேராகத் தேனி சென்றுள்ளார். அங்கு, அமைச்சர் ஒருவரின் நண்பருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியுள்ளார். அந்த ஹோட்டலில்வைத்து அடுத்தகட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. தனக்கு நெருக்கமானவர்களையும் அந்த ஹோட்டலுக்கு அன்புச்செழியன் வரவழைத்துள்ளார்.

அன்புச்செழியன்

 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 

அதன்பிறகு, அந்த ஹோட்டலில் இருந்தே சென்னையில் உள்ள முக்கிய நபர்களிடம் அன்புச்செழியன் பேசியுள்ளார். அவர்கள் நிலைமையின் வீரியத்தை அன்புச்செழியனிடம் சொல்லியுள்ளார்கள். அமைச்சர் தரப்பிலும், 'நீண்ட நாள்கள் உன்னை நாங்கள் பாதுகாக்க முடியாது' என்ற விவரத்தையும் அப்போது சொல்லியுள்ளார்கள். ஏற்கெனவே முதுகில் அறுவைச்சிகிச்சை செய்திருப்பதால், அந்த வேதனையும் அன்புச்செழியனை வாட்டியுள்ளது. அதன்பிறகு, நண்பர்களிடம் ஆலோசித்திருக்கிறார். தமிழகத்திலேயே இருக்க வேண்டாம் என்று அனைவரும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். பயணத்திலேயே இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்கள். இதனால் இனோவா காரில் தேனியிலிருந்து கிளம்பியவர் அண்டை மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கும் ஓரிடத்தில் தங்காமல் பயணத்திலேயே இருக்கிறாராம். இடையிடையே மருத்துவமனையில் முதுகு வலிக்கு சிகிச்சையும் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்!’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.


டிரெண்டிங் @ விகடன்