பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்களை வார்த்தைகளால் வதம் செய்வது தீர்வாகிவிடுமா? | Raising case of defaming students at campus: where is the solution

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (23/11/2017)

கடைசி தொடர்பு:15:38 (23/11/2017)

பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்களை வார்த்தைகளால் வதம் செய்வது தீர்வாகிவிடுமா?

ள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தவறு செய்யும் மாணவர்களை, சொன்ன பாடங்களைச் செய்யாத மாணவர்களை, ஆசிரியர்கள் கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதும் தண்டிப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இன்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள்கூட தமது பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் இதைக் கடந்தே வந்திருப்பார்கள். இதை எதிர்கொள்ளும் முறை தெரியாமல் சில மாணவர்கள் விபரீத முடிவுக்குச் செல்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. எக்காரணம் முன்னிட்டும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்ற வாதமும் பல காலமாக முன்வைக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் செய்யும் தவற்றை, ஆசிரியர்கள் வார்த்தைகளால் வதம் செய்வதால் தீர்வு கிடைத்துவிடுமா. இதற்கு என்னதான் செய்வது? 

மாணவர்கள் - தற்கொலை

'' 'அடியாத மாடு படியாது' என்கிற பழமொழியைத்தான் இன்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மூலதனமாகக் குழந்தைகளிடம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற சரியான புரிதல் இல்லாததே பல்வேறு தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன. ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளை எப்படி அணுகவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்'' என்கிறார் உளவியல் ஆலோசகர், பிருந்தா ஜெயராமன். இதற்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறார். 

பிருந்தா ஜெயராமன் 

* எந்தப் பிரச்னை இருந்தாலும், துணிந்து நின்று போராடும் குணத்தைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். 

* முந்தைய காலத்தில், குழந்தைகள் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள். அப்போது பெற்றோரும், 'நீ செய்தது தவறு. அதனால்தானே ஆசிரியர் அடித்தார். இனி இவ்வாறு நடந்துகொள்ளாதே' எனப் புத்திமதி சொல்வார்கள். ஆனால், இன்று குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்பதால், அவர்களைத் தண்டிப்பதற்காக கடினமான வார்த்தைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். 

* பெற்றோர்களுக்குக் குழந்தைகள் பேசுவதைக் கேட்பதற்கு நேரம் இல்லாததால், அவர்கள் முகம் வாடியிருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்துவிடுகின்றனர். 

* பள்ளியோ, வகுப்பறையோ ஆசிரியர்கள் மாணவர்களைத் திருத்த வேண்டும் என்று நினைத்தால், அதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. மனதைக் காயப்படுத்தும் வார்த்தைகளோ, அடியோ ஒருபோதும் தீர்வாக முடியாது.

* பொதுவாக மாணவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. அதைப் பெற்றவர்களும் ஆசிரியர்களும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

* முன்பெல்லாம் வீட்டிலும் வகுப்பறையிலும் மாணவர்கள் அடிவாங்குவார்கள், வசைச் சொற்களுக்கும் ஆளாவார்கள். ஆனால், அந்தக்காலம் வேறு. இப்போது சிறு வசைச் சொற்களைக்கூட பிள்ளைகள் தாங்குவதில்லை. வகுப்பறையிலிருக்கும் குழந்தைகளும் நம் குழந்தைகளே என்கிற எண்ணத்தை ஆசிரியர்கள் வளர்த்துக்கொண்டால் போதும்.

* காப்பி அடிக்கிறார்களா... உடனே அந்த மாணவனையோ/மாணவியையோ கடுமையாகத் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்புவதைவிட, அவர்களுடைய பேப்பரில் ரெட் மார்க் போட்டுவிடுங்கள். ரெட் மார்க் போட்ட பேப்பர்களைத் திருத்திக் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படத் தேவையில்லை. அவர்களுடைய தவற்றையும் நாம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறோம். இப்படி ஆசிரியர்கள் காலத்துக்கேற்ப தங்களுடைய நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

* என்னிடம் கவுன்சலிங் பெறுவதற்கு ஒரு பையன் வந்தான். இனி ஸ்கூலுக்குப் போகமாட்டேன் எனப் பெற்றோரிடம் அடம்பிடித்திருக்கிறான். 'ஏன் ஸ்கூலுக்குப் போகமாட்டே?' எனக் கேட்டதும், 'மிஸ் என்னை அடிச்சாக்கூட அந்த வலி கொஞ்ச நேரத்துல சரியாகிடும். ஆனா, அவங்க எல்லார் முன்னாடியும் என்னைத் திட்டுறாங்க. அது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டுவரவே முடியலை. அதனால் நான் ஸ்கூலுக்குப் போகமாட்டே'னு சொன்னான். தன் பிரச்னையைப் பெற்றோரிடம் சொன்னால், அவர்கள் தன்னையே குறை கூறுவார்கள் என்றே குழந்தைகள் பெற்றோர்களிடம் சொல்வதில்லை.

* அடித்தல் என்பது அந்த நேரத்து வலி... ஆனால், வசைச்சொற்கள் காலத்துக்கும் மாறாத ஒரு விஷயம். அதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த ஒன்றுதானே. பிறகு எப்படி அதையே பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் காண்பிக்க முடிகிறது என்பது புரியவில்லை. 

* பள்ளியோ, கல்லூரியோ... தினமும் உங்கள் பிள்ளைகள் வீட்டுக்கு வந்ததும் அவர்கள் முகத்தைப் படிக்கப் பழகுங்கள். சந்தோஷமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் அவர்கள் உங்களிடம் ஷேர் செய்கிற ஸ்பேஸை அவர்களுக்குக் கொடுங்கள்.

* பிள்ளைகள் எதை அவமானமாக உணர்கிறார்களோ, அதை அவர்களிடம் பிரயோகிக்காதீர்கள். அவை வார்த்தைகளாகவோ, செய்கைகளாகவோ எதுவாகவும் இருக்கலாம். கண்டுபிடியுங்கள்.

* தவறு செய்யும்போது தனியாக அழைத்து கண்டிப்பதுதான் சிறந்த வழி. பெரியவர்களான நாமே மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்பட விரும்புவதில்லை எனும்போது, குழந்தைகளையோ, டீன் ஏஜ் வயதினரையோ மற்றவர்கள் முன் அவமானப்படுத்துவது சரியா?

* தவறு செய்துவிட்டால் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தைப் பெற்றவர்கள் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். தவறு செய்வதைக் கண்டித்தால் உடனே தற்கொலை, மிரட்டல் என்பதை எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது. 

* எந்தத் தவற்றுக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதைச் சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கும் தெளிவாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்