வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (23/11/2017)

கடைசி தொடர்பு:18:49 (09/07/2018)

செல்லாக்காசு வதந்தியால் கீ செயினான பத்து ரூபாய் காயின்!

படத்தைப் பார்த்ததுமே விஷயம் புரிந்து இருக்குமே. இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்டுட்டு, சத்தம் போடாமல் கமுக்கமாக இருக்கும் அந்த நபர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால், அவர் போட்ட காயின் செயின் போட்டோ மட்டும் வைரலாகப் பரவிவருகிறது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட புது பத்து ரூபாய் காயின் நம்ம மக்களிடையே படும் பாடு கொஞ்சமா, நஞ்சமா? சில மாதங்களுக்கு முன் யாரோ ஒரு புண்ணியவான், புது பத்து ரூபாய் காயின் செல்லாது' என்று கொளுத்திப்போட, இந்திய தேசமே பதறியது. ‎டீக்கடை, காய்கறி, மளிகைக் கடைகள், பேருந்துகள் எங்கும் இந்த பத்து ரூபாய் காயினால் கலவரமான நிலவரம் நிலவியது. 'கள்ள காசு வந்துடுச்சு' என்றார்கள். 'ஒரிஜினல் காயினில் பதிமூன்று கோடுகள்தான் இருக்குமாம். பதினைந்து கோடுகள் இருந்தா செல்லாது' என்று இவர்கள் போட்ட போடில், பரந்து விரிந்த பாரத தேசமே காயின் கோடுகளை மாய்ந்து மாய்ந்து எண்ணிக்கொண்டிருந்தது.

அதுமட்டுமா சொன்னார்கள். 'பத்து என்ற எண் நடுவில் உள்ள நிக்கலில் இருந்தா, அது ஒரிஜினல், செப்பு வட்டத்தில் சேர்ந்து இருந்தா, அந்தக் காசு செல்லாது' என்றும் வகை வகையாக புரளிப் புளியைக் கரைத்து சுகம் கண்டார்கள். அவர்கள் கிளப்பி விட்டதிலெல்லாம் ஒரு லாஜிக் இருந்ததால், பாவப்பட்ட மக்களும் அதை நம்பினார்கள். நிலவரம் உள்நாட்டு கலவரத்தைக் கிளப்பும் லெவலுக்குப் போய்விட்டது. உடனடியாக ரிசர்வ் வங்கி பாய்ந்துவந்தது. 'எல்லா பத்து ரூபாய் காயின்களும் செல்லும். வாங்க மறுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றெல்லாம் பயம் காட்டும் அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், புது பத்து ரூபாய் காயின் மீதான மக்களின் நம்பிக்கையின்மை மாறவில்லை. அதன் அடுத்தக்கட்டத்தின் வெளிப்பாடுதான் இந்த பத்து ரூபாய் காயின் செயின்.