வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (23/11/2017)

கடைசி தொடர்பு:16:27 (23/11/2017)

தேர்தல் ஆணையம்மீது டி.டி.வி.தினகரன் சரமாரி புகார்! உச்ச நீதிமன்றத்துக்கு செல்வேன் என அறிவிப்பு

இரட்டை இலைச் சின்னத்தை பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

டி.டி.வி.தினகரன்


இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்தது. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அந்த அணியே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்புக்குப்பின் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், “தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கவில்லை. மத்திய அரசின் விருப்பப்படியே செயல்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதில் தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது. 122 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 37 எம்.பி-க்கள் ஆதரவுடன் இருந்தபோது, சின்னத்தை ஏன்  முடக்கினார்கள். தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். 

குஜராத் மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர் இப்போது தேர்தல் ஆணையத் தலைவராக இருக்கிறார். இதிலிருந்தே உங்களால் புரிந்துகொள்ள முடியும். சின்னம் யாருக்கு என்பதை அடிப்படை உறுப்பினர் ஆதரவைக் கொண்டுதான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நாங்கள் கட்டாயம் போட்டியிடுவோம். நிர்வாகிகள் ஆதரவுடன் நான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவேன். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசு இப்போது எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. பன்னீர்செல்வம் இப்போது திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதனால்தான் மைத்ரேயன் போன்றவர்கள் எதிர்க்குரல் எழுப்பிவருகிறார்கள்” என்றார்.