திரிசங்கு நிலையில் ஓ.பி.எஸ்! சேலத்தில் கலகலத்த தினகரன்

கோவைக்குச் செல்லும் வழியில் டி.டி.வி.தினகரன் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் தொண்டர்களைச் சந்தித்தார். சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் செல்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தார்கள். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், ''தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும் நடுநிலைமையோடு செயல்படவில்லை. இதை எதிர்த்து மேல் முறையீடாக உச்ச நீதிமன்றம் செல்வோம். எடப்பாடி பழனிசாமிக்கு அறுதிப் பெரும்பான்மை 117 எம்.எல்.ஏ-க்கள் கிடையாது. அவருக்கு 111 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை கவர்னரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரட்டை இலைச் சின்னம் அவர்கள் பக்கம் சென்றாலும், தொண்டர்களும், பொதுமக்களும் நம்ம பக்கம் இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தற்போது அவர்கள் பக்கம் இரட்டை இலைச் சின்னம் போனது குரங்கு கையில் மாலை கிடைத்தது போல இருக்கும். ஆர்.கே. தொகுதியில் ஏற்கெனவே நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். மீண்டும் பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற்று ஆட்சி மன்றக் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

வெற்றி பெற்ற பிறகு மீண்டும் இரட்டை இலையை மீட்போம். ஓ.பி.எஸ்., மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தார். தற்போது திரிசங்கு நிலை அடைந்திருக்கிறார்'' என்றார். இதையடுத்து, தொண்டர்கள் கொடுத்த பொன்னாடைகளைப் பெற்றுக்கொண்டு கிளம்பினார். திடீரென அந்த இடத்தில் டி.டி.வி., தினகரன் அணியைச் சேர்ந்த சசிகுமார், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனே அவரை அப்புறப்படுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!