'அ.தி.மு.க. எஃகு கோட்டை'!- தினகரனுக்கு எதிராக சீறிய ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்

இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமையகத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. எஃகு கோட்டை என்று கூறினார்கள்.

பழனிசாமி

 

இரட்டை இலைச் சின்னம் முதல்வர் அணிக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகம் இன்று களைகட்டியது. அங்கு ஏராளமான  தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் குவிந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாலை 5 மணியளவில் தலைமையகத்துக்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். இருவருக்கும் மலர்க்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் தலைமையகத்துக்குள் சென்றனர். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. 

பன்னீர்செல்வம்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார். அதில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க. எஃகு கோட்டையாக விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு பேசிய பன்னீர்செல்வம், “இரட்டை இலைச் சின்னம் கிடைத்திருப்பதன் மூலம் ஜெயலலிதாவின் ஆன்மா நமக்கு ஆதரவாக உள்ளது உறுதியாகி இருக்கிறது ” என்றார். “தேர்தல் ஆணையம் நீதி, உண்மை, தர்மத்தை நிலைநாட்டியுள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

 

பழனிசாமி, பன்னீர்செல்வம்


கூட்டத்துக்குப் பின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!