அன்புச்செழியனிடம் இரு நடிகைகள் கடன் அடைத்த கதை! | Story of two heroines on how they managed to settle the amount to AnbuChezhiyan

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (23/11/2017)

கடைசி தொடர்பு:12:32 (24/11/2017)

அன்புச்செழியனிடம் இரு நடிகைகள் கடன் அடைத்த கதை!

 

 

 சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் பணம் வாங்கி பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மிரட்டல்கள் குறித்த முழுவிவரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அன்புச்செழியன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் சிக்னல் வைத்து அன்புச்செழியனை தேடும் படலம் தொடர்ந்துவருகிறது.

அன்புச்செழியனின் அன்பு மிரட்டல்கள்குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், "அன்புச்செழியனின் சொந்த ஊர் ராமநாதபுரம். மதுரையில் செட்டிலானபிறகு, ஃபைனான்ஸ் செய்துவந்தார். அப்போது, நண்பர் ஒருவர் மூலம் சினிமாத்துறையில் ஃபைனான்ஸில் கால்பதித்தார். அதன் பிறகு அவருடைய வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. இந்தச் சமயத்தில்தான் அரசியல் பிரமுகர்களின் தொடர்பு அன்புக்குக் கிடைத்தது. தற்போது, அதிகார மையத்திலிருக்கும் மூத்த அமைச்சரின் இரண்டாவது மகன் ஒருவருக்கும் அன்புக்கும் ஏற்பட்ட நட்பு, பல விவகாரங்களிலிருந்து அவரைக் காப்பாற்றியது.அன்புச்செழியனைப் பொறுத்தவரை, பெண்கள் விஷயத்தில் ரொம்ப நல்லவர். ஆனால், கொடுத்தப் பணத்தை வாங்குவதில் கறார்பேர்வழி.

சொந்தமாகப் படம் தயாரித்த மூன்றெழுத்து பெயரைக் கொண்ட அந்த நடிகையும் ஃபைனான்ஸாக அன்புச்செழியனிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கியிருக்கிறார். ஆனால், வசூல்ரீதியாக அந்தப்படம் வெற்றி பெறவில்லை. இதனால், நஷ்டம் ஏற்பட்ட அந்த நடிகையும் பணத்தைக் கொடுக்க பலவகையில் முயற்சி செய்துள்ளார். ஒருகட்டத்தில் வட்டிகூட செலுத்த முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார். அப்போது, அன்புச்செழியன், தன்னுடைய ஸ்டைலில் பணம் கேட்கத் தொடங்கியுள்ளார். நடிகைக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம் கொடுத்த பணம் வரவேண்டும் என்று அன்புச்செழியன் கறாராகச் சொல்லியிருக்கிறார். வேறுவழியின்றி காலஅவகாசம் பெற்ற அந்த நடிகை பணத்தை திரும்பக் கொடுத்துள்ளார். 

அரசர் பெயரைக் கொண்ட இயக்குநர் ஒருவர், அன்புச்செழியனிடம் பணம் வாங்கியுள்ளார். அவரும் சிக்கலில் சிக்க.. இயக்குநரின் மனைவி மூலம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபல மியூசிக் டைரக்டர் ஒருவர் அன்புச்செழியனின் படத்துக்கு இசையமைக்க நேரமில்லை என்று கூறியிருக்கிறார். இந்தத் தகவல் அன்புச்செழியனுக்குத் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட மியூசிக் டைரக்டர் அலுவலகத்துக்குச் சென்று நீங்கள் இசையமைக்கும் ஆறு படங்களுக்கும் நான்தான் ஃபைனான்ஸ் செய்துள்ளேன். நீங்கள் ரொம்ப பிஸி என்றால் அந்தப் படங்களுக்கும் மியூசிக் அமைக்க வேண்டாம் என்று சொல்ல அடுத்த நிமிடமே இசையமைப்பாளர் ஆடிப்போய்விட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் அன்புச்செழியனின் தயாரிப்புப் படத்துக்கு மியூசிக் அமைக்க ஓகே சொல்லியிருக்கிறார். இப்படிதான் அன்புச் செழியனின் அன்பு மிரட்டல்கள் இருக்குமாம். அன்புச்செழியனிடம் பணம் வாங்காத கோலிவுட் வட்டாரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதனால், அவரை எதிர்த்து யாரும் எளிதில் வாய்திறக்க வாய்ப்பில்லை. பல சினிமா தயாரிப்பாளர்களைக் கைதூக்கிவிட்ட கதையும் இருக்கிறது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தவர், அதற்குத் தடையும் ஏற்படுத்தியிருக்கிறார். நள்ளிரவில் அன்புச்செழியனின் வீட்டுக்கதவைத் தட்டிய தயாரிப்பாளருக்குப் பல லட்சம் ரூபாய் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார். நம்பிக்கை பெயரில் அன்புச்செழியனிடம் பணம் பெற்றவர்களும் இருக்கின்றனர். 

இந்தச் சூழ்நிலையில் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமாரின் தற்கொலை கடிதத்தால் அன்புச்செழியனுக்குச் சிக்கல் எழுந்துள்ளது. அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸாருக்குகூட சில வாய்மொழி உத்தரவுகள் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளன. இதனால், அன்புச்செழியனை கைதுசெய்தால் நிச்சயம் போலீஸார் பாராட்டுக்குரியவர்கள்" என்றனர். 

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. ஏற்கெனவே மணிரத்னத்தின் உறவினர் வெங்கடேஷ் தற்கொலை வழக்கில் அன்புச்செழியன்மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போதுகூட அன்புச்செழியன்மீது சசிகுமாரைத் தவிர மற்றவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அன்புச்செழியன் அலுவலகத்தில் நடந்த வருமான வரிச் சோதனையின்போது நடந்த தாக்குதல் சம்பவம் எல்லோருக்கும் தெரியும். மற்றபடி அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆளுங்கட்சி அமைச்சர்கள் தரப்பில் எந்தவித பிரஸரும் வரவில்லை. எங்களுடைய கடமையைச் செய்துவருகிறோம். அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட சிலரிடம் அவர்குறித்து விசாரித்தபோது எங்களுக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது அன்பு மிரட்டல் ஸ்டைலே தனி என்கின்றனர். அன்புச்செழியன் கைதுசெய்யப்பட்டபிறகுதான் மற்ற விவரங்களைச் சொல்ல முடியும். அன்புச்செழியன் தலைமறைவாக இருக்கும் இடம்குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவரை கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.  

 சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனுக்கும் நடிகை ரம்பாவுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகை ரம்பாவின் சகோதரர் லட்சுமி ஶ்ரீனிவாஸிடம் பேசினோம். "பத்து வருஷத்துக்கு முன்பு விகடனுக்கு ரம்பா பேட்டி  கொடுத்திருந்தார். அப்போது, கந்துவட்டிப் பிரச்னை தலைவிரித்தாடிய தருணம். அப்போது அன்புச்செழியனின் பெயரும் அடிபட்டது. ரம்பாவிடம் எடுத்த பேட்டியில், 'கந்துவட்டி' குறித்துக் கேட்ட கேள்விக்குப் பலரைச்சுட்டிக்காட்டிய அவர், அன்புச்செழியனின் பெயரையும் குறிப்பிட்டார். இதனால் மதுரை நீதிமன்றத்தில் ரம்பாமீது அன்புச்செழியன் வழக்கு தொடர்ந்தார். அதை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெற்றோம். தமிழ் சினிமாவில் 'கந்துவட்டி' கொடுமையால் அசோக்குமார் தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சிதான்"என்றார். 

அடுத்து, கடந்த 2002-ம் ஆண்டு 'காதலுடன்' படத்துக்காக அன்புச்செழியனிடம் 60 லட்ச ரூபாய் கடன் பெற்றவர் நடிகை தேவயானி. அவரைத் தொடர்புகொண்டபோது, அவரது கணவர் ராஜகுமாரன் பேசினார், 
''நான் கண்ட சினிமா பைனான்சியர்களில் அன்புச்செழியன் மாதிரி ஒரு நேர்மையான ஆளைப் பார்க்கவே முடியாது. 'காதலுடன்' படத்துக்கு எங்கள் முகத்தைக் கூடப் பார்க்காமல் 60 லட்சரூபாய் கடனாகக் கொடுத்தார். ஐம்பது லட்சம் கொடுத்தபிறகு மீதமுள்ள பத்து லட்சம் ரூபாயைக் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தப் பத்து லட்சம் ரூபாயை அன்புச்செழியனை நேரில் பார்த்துக் கொடுத்தேன். ஆனால், அதைப் பல மீடியாக்கள் பல விதமாக செய்திகள் வெளியிட்டன. அப்போதுதான் ஒரு பத்திரிகையில் தெளிவாக, 'தேவயானியின் செருப்பைக்கூட யாரும் நெருங்க முடியாது'னு பேட்டி  கொடுத்திருந்தோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கூட அன்புச்செழியனிடம் நல்லாத்தான் பேசிட்டிருந்தேன். அதற்குள்ள இப்படியொரு நியூஸ் வரும்னு நான் எதிர்பாக்கவே இல்லை.' என்றார். 

 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 

 

 

 

 அன்புச்செழியன் தரப்பில் பேசியவர்கள், "திரைப்படங்கள் தயாரிக்க ஃபைனான்ஸ் செய்துவருகிறோம். 4 சதவிகித வட்டிக்குத்தான் பணம் கொடுக்கிறோம். பணத்தை வாங்கியவர்கள், அதை திரும்பக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது, ஃபைனான்ஸ் செய்தவர்கள்மீது கந்துவட்டிப் புகார் கொடுக்கின்றனர். அதோடு தேவையில்லாத தகவல்களையும் உண்மைக்குப் புறம்பாகச் சொல்கின்றனர். அன்புச்செழியன்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரபல சினிமா இயக்குநர் ஒருவரின் உறவினர் தற்கொலை செய்தபோதும் எங்கள்மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அதையும் சட்டரீதியாக எதிர்கொண்டோம். அதுபோலதான் அசோக்குமார் தற்கொலை வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். எங்கள்மீது புகார் கொடுப்பதற்கு முன்பு நாங்கள் செய்த உதவிகளை நினைத்துப்பார்த்தால் மனசாட்சியுள்ளவர்கள் நிச்சயம் புகார் கொடுக்க மாட்டார்கள்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்