நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது... கார்த்திகை தீப அலங்காரப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி!

நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பர்ய பொருள்கள் தயாரிப்புகுறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். 

சிறப்புப் பயிற்சி

உலகப் பாரம்பர்ய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று பாரம்பர்ய பொருள்களின் தயாரிப்புகுறித்த செயல் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலமாக இந்தச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பர்ய திருவிழாவான திருக்கார்த்திகை விழாவுக்குப் பயன்படுத்தப்படும் தீப அலங்காரப் பொருள்களைத் தயாரிப்பது பற்றி செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், கைவினைப் பொருள்கள் தயாரிப்புகுறித்து பொதுவான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருள்கள் செய்வோர் நலச்சங்கம், லோட்டஸ் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் ஆகியவை இந்தப் பயிற்சியை அளித்தன. 

இந்தப் பயிற்சியில் நெல்லை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் கலந்துகொண்டனர். இந்த முகாம் தங்களுக்குப் பயன் அளிப்பதாக இருந்ததாக இதில் பங்கேற்ற பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி செய்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!