வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (23/11/2017)

கடைசி தொடர்பு:14:46 (09/07/2018)

தொண்டி அருகே நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இன்று நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்தவர் முகம்மதுயூசுப். இவர் இன்று மாலை இண்டிகா காரில் தனது குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார். கிழக்குக் கடற்கரை சாலையில் பயணித்த இந்தக் கார் எஸ்.பி. பட்டினத்தை அடுத்துள்ள பரப்புவயல் என்னும் கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டாடா சுமோ காரின் மீது மோதியது.

இந்த விபத்தில் முகம்மது யூசுப் குடும்பத்தைச் சேர்ந்த அயூப்கான் (65), சைபுநிஷா (55), ஜாகிராம்மாள் (70), சித்தின் நிலோபர் (8) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷபீகா என்ற 4 வயது குழந்தை பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்து தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.