வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/11/2017)

கடைசி தொடர்பு:08:18 (24/11/2017)

பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குள் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!

பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலைக்குள் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறைக் கைதிகளுக்கு விழிப்பு உணர்வு அளித்தார்.

டெங்கு விழிப்பு உணர்வு

நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதிகாலையிலேயே ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வீடு வீடாகச் சென்று டெங்கு உற்பத்தி செய்யும் ஏடிஸ் வகை கொசுக்களின் முட்டைகள் புழுக்கள் இருக்கின்றனவா எனச் சோதனை நடத்திவருகிறார். வீடுகளில் அவசியம் இல்லாத பொருள்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரின் ஆபத்தை விளக்கிக் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் இன்று டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சித்த மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சிறைக் கைதிகள் அனைவருக்கும் நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது. டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேக்தலின் பள்ளி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை கைதிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். 

நிலவேம்பு கசாயம்

பின்னர் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’’நெல்லை மாவட்டத்தில் மெகா தூய்மைப் பணிகள் மற்றும் டெங்குக் கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உபயோகமற்ற பொருள்களை உடனுக்குடன் அகற்றி விட வேண்டும். சிறைச்சாலை வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். டீ கப் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால், அவற்றை குப்பைத் தொட்டிகளில் போட்டுவிட வேண்டும். சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் சிறைச்சாலையில் உள்ள மருத்துவரை அணுகி, மருத்துவ சிகிச்சை பெறவேண்டும். நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தால் இந்த மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பை முழுமையாகச் செயல்படுத்த முடியும்’’ என்றார். 

இந்த நிகழ்ச்சியில், சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், மாநகர நகர்நல அலுவலர் பொற்செல்வன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் டாக்டர். நோபிள் அருள்மணி, பரமசிவன், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ரமேஷ், மேக்தலின் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.