வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (24/11/2017)

கடைசி தொடர்பு:12:48 (24/11/2017)

“விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவரும்!” - சசிகலா ஆதரவாளர்கள் ஆரூடம்

செப்டம்பர் 22, 2016 அன்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா

சில நாட்களுக்குப் பின், 'ஜெயலலிதா நலமாக உள்ளார்; இட்லி சாப்பிடுகிறார், அதிகாரிகளைச் சந்தித்தார்' என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் புதுபுதுத் தகவல்களை அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதுபோன்ற சூழலில், 75 நாள்களுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்து, டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டில் அரசியல் களத்தைப் புரட்டிப்போட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க-வில் தனி அணியாகச் செயல்பட்ட முன்னாள் முதல்வரும், இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது.

ஆறுமுக சாமி விசாரணைக் கமிஷன்

இந்த விசாரணைக் கமிஷன் தனது பணியைத் தொடங்கியுள்ளது. 

விசாரணை கமிஷன் முன், பலரும் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதுடன், நேரில் ஆஜராகியும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தங்களின் விளக்கங்களைப் பதிவு செய்துவருகிறார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, விசாரணை கமிஷனில் புகார் மனுவை அளித்துள்ளார். அதில், "தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு நானும், என் தம்பி தீபக்கும் மட்டுமே உண்மையான வாரிசுகள். மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதித்தவுடன், அதுபற்றிய செய்தி எங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. ஊடகங்களைப் பார்த்தே நாங்கள் தெரிந்து கொண்டோம். அதேபோன்று, ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கு எங்களை மருத்துவமனைக்குள்  அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் என் அத்தையின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்னைப் பலமுறை தொடர்புகொண்டு, அத்தை என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால், போயஸ்கார்டனில் இருந்த சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அவரின் அவரின் உறவினர்கள், என் அத்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. 

'ஜெயலலிதாவின் சொத்துகள், அவர்களின் கையை விட்டுப் போய் விடுமோ' என்று பயந்து, என்னை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து விட்டனர். நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, 'என்னுடைய அத்தையின் சொத்துகளுக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்று கருதுகிறேன். அதுகுறித்து நுண்ணிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெ.தீபாவின் புகார் குறித்து தினகரன் ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதியிடம் பேசினோம். “போயஸ் கார்டன் சொத்துக்காகப் போராடுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தபோது, ‘அத்தை உபயோகித்த ஒரு பேனாவை மட்டும் கொடுங்கள் போதும்; வேறு எதுவும் தேவையில்லை’ என்றார் தீபா. அதனைத்தொடர்ந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'அத்தைக்கு சிகிச்சை நன்றாகத்தான் அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரிப் பேசி வருகிறார் அவர். சரி, அவரின் பேச்சுதான் இப்படியென்றால், போயஸ் கார்டனில் வருமானவரி ரெய்டு நடந்தபோது நாங்கள் அனைவரும் வேதனையுற்றோம். அப்போது அங்கு வந்த தீபா, 'இது எங்களுடைய சொத்து; அத்தையின் சொத்துக்கு நாங்கள்தான் வாரிசு' எனசி ஆர் சரஸ்வதி முழங்கினார். எனவே, போயஸ் கார்டன் சொத்தில் குறியாக இருப்பவர் தீபாதான். ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்த சசிகலா, சொத்துகள் பற்றி இதுவரைப் பேசவேயில்லை.

இன்னும் தெளிவாகச் சொன்னால், நான் 2002-ம் ஆண்டில் அ.தி.மு.க-வில் இணைந்தேன். கட்சி அலுவலகத்திலோ அல்லது போயஸ் கார்டன் வீட்டிலோ தீபாவை பார்த்ததே கிடையாது. அவருடைய தம்பி தீபக்கை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அத்தை என உரிமை கொண்டாடும் தீபாவின் திருமணத்துக்குக்கூட ஜெயலலிதா போகவில்லை. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததே சசிகலாதான். அதனை தீபாவே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது. போயஸ்கார்டனுக்கு அவர் எப்படி உரிமை கொண்டாட முடியும்?

சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஏதாவது அவதூறு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீபா பேசிவருகிறார். அவரின் ஒரே குறிக்கோள், போயஸ் கார்டன் சொத்துதான். ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது. எனவே, தீபாவின் பேச்சுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்றார் தடாலடியாக.தங்க தமிழ்ச் செல்வன்

இதுகுறித்து தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டவருமான தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, "எதற்கு இப்படி ஒரு கருத்தை தீபா வெளியிட்டார் எனத் தெரியவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தீபாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சேர்க்கவில்லை. அப்படி இருந்தும் சசிகலா குடும்பத்தினர், இவருக்கு உதவி செய்தனர். தற்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறப்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் விசாரணை முடிந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியில் வரும். நியாயம் வெல்லும். மரணத்தில் மர்மர் இருப்பதாகத் தெரிவிக்கும் அனைவருமே சந்தேகத்தின் அடிப்படையில்தான் பேசி வருகின்றனர். ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார். விசாரணைக் கமிஷனின் அறிக்கை வந்ததும், அனைவருக்கும் உண்மைகள் தெரியவரும்" என்றார்.

ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், அவரின் மரணம் குறித்த சர்ச்சை இன்னமும் முடிந்தபாடில்லை. ஜெயலலிதா தலைமையில் ராணுவக் கட்டுக்கோப்புடன் இருந்த அ.தி.மு.க-வும் இப்போது குழப்பங்கள் நிறைந்த கட்சியாகிப் போனது... எதில் போய் முடியுமோ இந்த சர்ச்சைகள்... என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்