பரமக்குடி அருகே தாலி கட்டிய நிலையில் தடுக்கப்பட்ட குழந்தைத் திருமணம்! | Child Marriage Stopped in Paramakudi

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (23/11/2017)

கடைசி தொடர்பு:08:24 (24/11/2017)

பரமக்குடி அருகே தாலி கட்டிய நிலையில் தடுக்கப்பட்ட குழந்தைத் திருமணம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த  திருமணத்தை தாலி கட்டிய நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

பரமக்குடி அருகே குழந்ந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர்.நகரில் வசித்துவந்த 16 வயதுச் சிறுமிக்கும் பரமக்குடி அருகே காந்தி காலனியில் வசிக்கும் முத்தையா மகன் சித்திரைச் செல்வம் (22) என்பவருக்கும் சிறுமியின் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இத்தகவல் சைல்டுலைன் அமைப்பு மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததையடுத்து அவர்கள் உடனடியாகத் திருமணத்தை தடுக்க அப்பகுதிக்கு விரைந்தனர். அதிகாரிகள் வரும் தகவல் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததால், அவர்கள் வருவதற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். மணமகன் சித்திரைச் செல்வம் சிறுமியின் கழுத்தில் அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே தாலி கட்டிவிட்டார்.

அங்கு வந்த அதிகாரிகள்,  'சிறுமியைத் திருமணம் செய்வது சட்டப்படி தவறு' என்று எடுத்துக்கூறி அச்சிறுமியை மீட்டு ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் சகுந்தலாவிடம் ஒப்படைத்தனர். அவர் சிறுமிக்கும், பெற்றோருக்கும் அறிவுரைகள் வழங்கி மீண்டும் பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைத்தார். சிறுமியைத் திருமணம் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர்கள்மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்வதுகுறித்தும் பரிசீலனை செய்துவருகின்றனர்.

இதற்கிடையே, மற்றொரு சம்பவமாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசை கிராமத்தைச் சேர்ந்த 19 வயது சிறுமிக்கும், ஊரணிக்காரன் வலசை கிராமத்தைச் சேர்ந்த நாகசாமி மகன் திலீபன் (22) என்பவருக்கும் குத்துக்கல்வலசை கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இத்தகவல் சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜுக்குத் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தராஜ், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் நாகசாந்தி, மாவட்ட  சமூக நல அலுவலக உதவியாளர் பாலுச்சாமி மற்றும் திருப்புல்லாணி போலீஸார் உள்ளிட்டோர் அங்கு சென்று அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.