வெளியிடப்பட்ட நேரம்: 02:50 (24/11/2017)

கடைசி தொடர்பு:09:14 (24/11/2017)

கொங்கு மண்டலத்தில் தினகரன் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும், ஒவ்வொரு மண்டலமாகத் தன்னுடைய அணியைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்துப் பேசிவருகிறார், அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன். 

அதன் அடிப்படையில், திருப்பூரில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, நேற்றைக்கு முந்தைய தினம் மாலை திருப்பூர் வந்தடைந்தார் தினகரன். இரட்டை இலை சின்னம் கிடைக்கப்பெறாத சூழலில் திருப்பூர் வந்திறங்கிய தினகரன், திருப்பூரில் உள்ள தன் அணியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, திருப்பூரின் முன்னாள் எம்.பியும், தற்போதைய தினகரன் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளருமான சிவசாமியின் இல்லத்தில் நேற்று இரவு தங்கினார்.

இன்று, பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில், தினகரன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து தினகரன் அணி நிர்வாகிகள் திரண்டுவந்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணியினர் பெற்றுவிட்ட நிலையில், இலை இனி இல்லை என்ற நிலையில் இருக்கும் தினகரன், உடனடியாக அடுத்தகட்டமாக எடுக்கப்பட இருக்கும் சில முக்கிய நடவடிக்கைகள்குறித்து இக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.