தேசிய அளவிலான கபாடி போட்டிக்குத் தேர்வான புதுக்கோட்டை மாணவி!

''தேசிய அளவிலான கபாடி போட்டிக்குத் தேர்வான விஷயம் தெரிந்ததும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நம்ம மண்ணின் விளையாட்டான, கபாடி வீராங்கனையாக இருப்பது எனக்குப் பெருமையான விஷயம். நம்ம தமிழ்நாட்டு அணிக்காக நல்லா விளையாடி, ஜெயித்து கோப்பையை வாங்கணும்"என்று கண்களில் ஆர்வம் மின்னப் பேசுகிறார், கபாடி வீராங்கனை உலகநாயகி.

 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்தவர், உலகநாயகி. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், படிப்பிலும் விளையாட்டிலும் சிறு வயதிலேயே படுசுட்டி. அதிலும் கபடி என்றால் இவருக்கு உயிர். கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாகப் பயிற்சி எடுத்துவந்த உலகநாயகி, மாவட்ட, மாநிலப் பள்ளிகள் லெவலில் விளையாடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் விளைவாக, டிசம்பர் 22-ம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கபடிப் போட்டிக்கு தமிழக அணி சார்பாக உலகநாயகி விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகி இருக்கும் உலகநாயகிக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
"எங்கள் கிராமத்தைச் சேர்ந்த உலகநாயகி, ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய அளவில் விளையாட அவர் தேர்வாகி இருப்பது எங்களுக்குப்  பெருமை" என்று சிலாகிக்கிறார்கள், அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!