வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (24/11/2017)

கடைசி தொடர்பு:10:51 (24/11/2017)

மெஜாரிட்டியை நிரூபிப்போம்!- சொல்கிறார் ராஜன் செல்லப்பா

”இரட்டை இலை சின்னத்தைப் பெற்ற எங்கள் அணிக்குப் போதுமான மெஜாரிட்டி உள்ளது என்பதை நிரூபிக்க வழிவகை செய்யப்படும்” என அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

ராஜன் செல்லப்பா

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  

இந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக்கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில், “எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எங்கள் அணிக்குப் போதுமான மெஜாரிட்டி உள்ளது என்பதை நிரூபிக்க வழிவகைசெய்யப்படும்” எனக் கூறினார்.