"எங்களுக்கும் எல்லா திறமைகளும் இருக்கு" -நெகிழவைத்த மாற்றுத்திறனாளிகள்!

"எங்களுக்குள்ளே இருக்கும் விளையாட்டுத்  திறமைகளைக் கண்டுபிடித்து, உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து,போட்டிகள் நடத்திப் பரிசுகள் தருவது, எங்களிடமும் திறமை உள்ளது என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது" என்று நெகிழ்ந்தார்கள், மாற்றுத்திறனாளிகள்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டியை நேற்று நடத்தியது. மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், போட்டிகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மன்னர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதுமிருந்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்களின் திறன்,உடல் சார்ந்த பலம், பலவீனங்களைக் கவனமாக கருத்தில் கொண்டு, விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கவைக்கப்பட்டனர்.

அதிக உற்சாகம் காட்டிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கம் தரும் வகையில், மற்ற போட்டிகளிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பங்குபெற வைத்தனர். மாற்றுத்திறனாளிகளின் சந்தோஷ, உற்சாகக்குரல்களால் மைதானமே நிரம்பியது. வேடிக்கை பார்க்கவந்த பொதுமக்களும் ஆசிரியர்களும் குரல் எழுப்பி, கைகளைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!