வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (24/11/2017)

கடைசி தொடர்பு:15:34 (24/11/2017)

“அரசியல்வாதிகளுக்கு பார் டெண்டர் போய்விடும்...!” - பார் உரிமையாளர்களை மிரட்டும் டாஸ்மாக் நிர்வாகம்

டாஸ்மாக்

“டாஸ்மாக் கடைகளின் 'பார்' உரிமக் கட்டணம் மூன்று சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வசூலிக்கப்படலாம்” என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது நடப்பு ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி வரைக்கான உரிம ஒப்பந்தம். இந்த அறிவிப்பில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு இருக்கிறது. இதனால், டாஸ்மாக் 'பார்'களை எடுத்து நடத்தும் உரிமையாளர்களுக்கும் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், ஏற்கெனவே இருந்த 2.5 சதவிகித வரி கட்டப்பட்டு வந்தநிலையில் அன்பரசன்தற்போது மூன்று சதவிகித வரியை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பை, டாஸ்மாக் 'பார்'களை டெண்டர் எடுத்து நடத்தும் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்தநிலையில், பார் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வரி அதிகரிப்பைத் தடுக்கச்சொல்லி வழக்குத் தொடுத்தனர். அதை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் மதுக்கூட கட்டட உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பரசனிடம் பேசியபோது, “ஏற்கெனவே டாஸ்மாக் நிர்வாகம் 2.5 சதவிகிதம் வரி போட்டிருக்கிறார்கள். அந்தத் தொகையையே எங்களால் கட்ட முடியாமல், 1.5 சதவிகிதத்துக்குக் குறைக்கச் சொல்லி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு டாஸ்மாக் பார் டெண்டர் நடத்தப்படவில்லை. அதனால், இந்த 1.5 சதவிகித வரியைப்பற்றி டாஸ்மாக் தரப்பு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், அடுத்த வருடத்துக்கான... அதாவது வரும் டிசம்பர் மாதம் 1- ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2018) நவம்பர் 30-ம் தேதி வரைக்கும் பார் டெண்டர் விடப்போவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மதுப்பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டது. அதனால் பாருக்கும் விலையை உயர்த்திவிட்டோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி நியாயம் ஆகும்?

மதுப்பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டதால், பாருக்கும் அதே அளவு லாபம் வரும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எப்படி நினைக்கலாம்? 'பார்' டெண்டர் எடுப்பவர்கள் பாட்டில் மற்றும் சைட்-டிஷ் வைத்துத்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால், பாட்டில் விலை எப்போதும் ஒரே மாதிரிதான். வேணுமென்றால், பாட்டில்களை மொத்தமாக டாஸ்மாக் நிர்வாகமே எடுத்துக்கொள்ளட்டும். பாட்டிலால், எங்களுக்கு ஒரு லாபமும் கிடையாது. சைட்-டிஷ்ஷில் மட்டும் கொஞ்சம் சம்பாதிக்க முடியும். அதற்கே மக்கள், பாரில் கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதில், இன்னும் விலையை உயர்த்தினால் அவ்வளவுதான். 90 சதவிகித டாஸ்மாக் விற்பனை நடப்பது பார் உரிமையாளர்கள் இடத்தில் மட்டும்தான். அந்த இடத்துக்கு மட்டும் வாடகையைக் குறைவாகக் கொடுத்துவிட்டு, பார் உரிமத்துக்கு மட்டும் அதிக வரி போடுகிறார்கள். என்ன நியாயம் இது? அது மட்டுமல்ல... டெண்டர் மாதந்திர தொகையில் இரண்டுமாதத் தொகையை டாஸ்மாக் நிர்வாகம் முன்பே வாங்கி டெபாசிட் செய்துகொள்ளும். அந்தத் தொகையைக் கடைகள் சில மாதங்களில் கணக்குப் பார்க்கும். தற்போது அந்தத் தொகையைப் பற்றிக்கூடப் பேசுவதில்லை. இதுகுறித்து கேட்டால், 'மூன்று சதவிகித வரியுடன் பணம் கட்டுவதுபோன்று இருந்தால், பார் டெண்டர் கிடைக்கும். இல்லையென்றால், அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அரசியல்வாதிகள் கைக்கு டெண்டர் போய்விடும்' என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.

பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்.

பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்.

அதனால்தான் கோர்ட்டில் கடந்த திங்கள்கிழமை (20-11-2017) கேஸ் போட்டோம். ஆனால், நேற்று (23-11-2017)  நாங்கள் தொடுத்த அனைத்து வழக்குகளையும் கோர்ட் மொத்தமாகத் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது மூன்று சதவிகித வரியைக் கட்டினால்தான் எங்களுக்கு பார் டெண்டர் கிடைக்கும். ஆனால், பார் உரிமையாளர்கள் யாரும் மூன்று சதவகித வரி கட்டமாட்டோம். மீறி டாஸ்மாக் நிர்வாகம் ஏதாவது சொன்னால், 'எங்கள் இடத்தை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள். நாங்கள் வேறு ஏதாவது தொழில் செய்துகொள்கிறோம்' என்று சொல்லப்போகிறோம். இவ்வளவு வரிகொடுத்து நஷ்டத்தில் விழுவதைவிட, எங்கள் இடத்தை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் வேற ஏதாவது தொழில் செய்து நஷ்டம் இல்லாமல் வாழ்வோம். அது தொடர்பாகப் பார் உரிமையாளர்களை வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகத்துக்குச் சொல்வோம்'' என்றார்.

தனசேகரன்

தனசேகரன்

இதுதொடர்பாகத் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் (AITUC) தனசேகரனிடம் பேசியபோது, “டாஸ்மாக்கும், பார்களும் இணைந்து இருப்பதினால் மட்டும்தான் இதுபோன்ற பிரச்னைகள் அதிகமாக எழுகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடாது என்றால் டாஸ்மாக் தனியாகவும், பார்கள் தனியாகவும் நடத்தப்பட வேண்டும். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்கக்கூடாது. இதுபோன்றுதான் கேரளாவில் இயங்கிவருகிறது. அதாவது, டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது என்றால், பார்களை மொத்தமாகத் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டுவிடும். ஆனால், டாஸ்மாக் அருகில் பார்கள் இருக்காது. பார் என்பது தனி; அங்கு மது விற்பனையும் இருக்கும். மதுகுடிக்க வருவோர்களுக்காக நுழைவு வரியும் இருக்கும். அதனால் அரசுக்கு அதிகமாக வருமானம் கிடைக்கும். இப்படி அமைத்தால், டாஸ்மாக்குகளுக்கும், பார்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது; எவ்வித பிரச்னைகளும் தோன்றாது. அதுபோல தமிழகத்தில் இருக்க வேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்