வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (24/11/2017)

கடைசி தொடர்பு:12:30 (24/11/2017)

பாலியல் பலாத்கார வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் ரொபின்ஹோவுக்கு 9 ஆண்டுகள் சிறை

பாலியல் பலாத்கார வழக்கில் பிரேசில் வீரர் ரொபின்ஹோவுக்கு இத்தாலி நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

ரொபின்ஹோவுக்கு சிறைத்தண்டனை

பிரேசில் கால்பந்து வீரர் ரொபின்ஹோ 2013-ம் ஆண்டு ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடி வந்தபோது, மிலன் நகரில் இரவு விடுதி ஒன்றில் அல்பேனிய பெண் ஒருவரை 5 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மிலன் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை  விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 60 ஆயிரம் யூரோ நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2004-ம் ஆண்டு, ரியல்மாட்ரிட் அணியில் இணைந்த அவர் மான்செஸ்டர் சிட்டிக்காகவும் விளையாடியுள்ளார். ஏ.சி.மிலனில் 2012-ம் ஆண்டு இணைந்தார். பிரேசில் அணிக்காக 100 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ள ரொபின்ஹோ, 28 கோல்களை அடித்துள்ளார். ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடியபோது, இரு முறை லாலீகா பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

பிரேசில் சட்டப்படி  அந்நாட்டு குடிமகனை மற்ற நாடுகளிடம் ஒப்படைக்க முடியாது. அதனால், மூன்றாவது நாட்டில்தான் ரொபின்ஹோவை இத்தாலி கைதுசெய்ய முடியும். தற்போது, 33 வயதான ரொபின்ஹோ பிரேசிலைச் சேர்ந்த அத்லெடிகோ மினரியோ அணிக்காக விளையாடிவருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க