`ஆர்.கே.நகரில் மதுசூதனன் மீண்டும் போட்டியா' நழுவிய அமைச்சர் உதயகுமார் | minister udayakumar escaped from the r.k.nagar strategy

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (24/11/2017)

கடைசி தொடர்பு:15:15 (24/11/2017)

`ஆர்.கே.நகரில் மதுசூதனன் மீண்டும் போட்டியா' நழுவிய அமைச்சர் உதயகுமார்

ஆர்.கே.நகர் இடைர்தேர்தலில் மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு நழுவலாகப் பதில் அளித்தார் அமைச்சர் உதயகுமார்.

சென்னையில் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

இரட்டை இலைச் சின்னம் நேற்று உங்களுக்கு கிடைத்துவிட்டது. இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க தயாராக இருக்கிறதா?

அரசியல் இயக்கம் என்னாலே தேர்தலுக்கு தயாராகத்தான் இருக்கும். அதுவும் நேற்றைய தினம் ஒரு வரலாற்று நிகழ்வாக இந்தியாவிலேயே எந்த இயக்கமும் இல்லாத வகையிலே இரண்டு முறை முடக்கப்பட்ட ஒரு சின்னம் மீட்கப்பட்டிருக்கிறது. முதலில் ஜெயலலிதாவால் சின்னம் மீட்டெடுக்கப்பட்டது. தற்போதும் நடைபெற்ற தியாகப்போராட்டத்திலே முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட ஒன்றரைக்கோடி தொண்டர்கள் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க சின்னத்தை மீட்டுள்ளோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்குறித்து தலைமை முடிவெடுக்கும். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மதுசூதனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

வேட்பாளர் தேர்வு என்பதும் தேர்தலை அணுகும் வியூகங்கள் என்பதும் தலைமை முடிவு எடுக்கும். தலைமை அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற அனைத்து தொண்டர்களும் உழைப்பார்கள். 

தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதே?

பொதுவாக ஆளுகிற கட்சிக்கு கிடைக்கிற ஒவ்வொரு வெற்றியும் எதிர்க்கட்சிகள் குறைகூறுவார்கள். முன்பு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதிலும் விமர்சனம் செய்தார்கள். அதன்பிறகு சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கோரினார்கள். அதிலும் வெற்றிபெற்றோம். அதையும் விமர்சித்தார்கள். அதன் பிறகு இந்த இயக்கமே இருக்காது என்று சொன்னார்கள். இதை நிலைநிறுத்தும் வகையில் முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.